

குறுகிய காலத்தில் 20,000 குடியுரிமை விண்ணப்பங்களை அங்கீகரித்திருக்கும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோனின் கரிசனமிக்க நடவடிக்கை ஓர் அதிரடி சாதனை என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வர்ணித்தார்
தாம் அமைச்சராகப் பதவியேற்ற பின்பு, மலேசியக் குடியுரிமைக்கான 55 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருந்ததாகவும், எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிப்பதில் தமக்கும் அமைச்சின் தலைமைச் செயலாளருக்கும் விவாதாங்கள் எழுந்ததாகவும் டத்தோஸ்ரீ சைஃபுடின் கோடிகாட்டியுள்ளார்.
எத்தகைய விண்ணப்பங்களை நிராகரிப்பது என்பதில் விவாதங்கள் எழுந்த போதிலும், குடியுரிமைக்காக 10 முதல் 15 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விண்ணப்பத்தாரர்களில் 20,000 பேருக்கு முறையே குடியுரிமையை அங்கீகரித்து, தமது செயல்திறமையையும் மனிதநேயத்தையும் அமைச்சர் நிரூபித்திருக்கிறார் என்று டத்தோ ரமணன் புகழாரம் சூட்டினார்.
அரசு கேந்திரங்களின் செயல்பாடுகள் யாவும் துரிதமாகவும் விவேகமாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவ்வப்போது வலியுறுத்தி வருகின்றார்.
அவரின் கட்டளைக்கு இணங்கி, அதிரடி களப்பணியில் திறம்பட செயல்பட்டு வருகின்ற உள்துறை அமைச்சு, மிகச் சிறந்த முன்னுதாரமாகத் திகழ்வதாக பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு துணைத் தலைவருமான டத்தோ ரமணன் பெருமிதம் தெரிவித்தார்.

