

மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ சமூகநல பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் 65 கோடியே 40 லட்சம் வெள்ளியில் பேராக் ஈப்போ ஜெலாபாங் பண்டார் மேரு ராயாவில் தேசிய நரம்பியல் நியூரோ- சைபர்னிக்ஸ் ரோபோடிக் மறுவாழ்வு மையம் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது.
இதேபோன்ற ஒரு நியூரோ-ரோபோடிக் மறுவாழ்வு மையம் மலாக்கா மாநிலத்தில் உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி வழங்கும் வகையில் இந்த நியூரோ-ரோபோடிக் மறுவாழ்வு மையம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஆசிய பிராந்தியத்தில் நியூரோ-ரோபோடிக் சேவை மையத்தை உருவாக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்த மறுவாழ்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் வரும் 2024 ஆம் ஆண்டில் பூர்த்தி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 37.5 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த மறுவாழ்வு மையத்தின் கட்டுமானப் பணிகளை மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று காலையில் நேரில் பார்வையிட்டார்.
கட்டுமான பணிகள் குறித்து அவருக்கு முழு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த மறுவாழ்வு மையம் பேறு குறைந்தவர்களுக்கு சிறந்த தரமான மற்றும் மீட்பு சேவைகளை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கட்டுமான திட்டங்கள் நிறைவடைந்ததும் நூற்றுக்கணக்கான மாற்று திறனாளிகளுக்கு ஒரு பயனுள்ள மறுவாழ்வு பயிற்சி மையமாக இது விளங்கும் என்பதில் ஐயமில்லை என்றார் அவர்

