
சுங்கை பூலோ, மார்ச் 25:
கார்ப்பரேட் மாஃபியா ஊழலைச் சமரசம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், பொதுப் பங்கு நிறுவனங்களில் தமக்கு ஒரு பங்குக் கூட கிடையாது என்றும் கெஅடிலான் கடையின் உதவித் தலைவர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விக்டர் சின், இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்காக 9.5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் சவால் விடுத்தார்.
சுங்கை பூலோவில் உள்ள தமது சேவை மையத்தில் இன்று நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டத்தோஶ்ரீ ரமணன், விக்டர் சின் குறிப்பிடும் ‘மிஸ்டர் R’ யார் என்பதற்கு அவரே பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.
பொறுப்பற்ற சில தரப்பினர் இந்த விவகாரத்தில் தம்மைத் தொடர்புபடுத்திப் பேசுவதை தாம் அறிவதாகவும், குறிப்பாகத் தமக்கு மில்லியன் கணக்கான பங்குகள் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும் அவர் விளக்கமளித்தார்.
பொதுப் பங்குச் சந்தையில் தமக்கு பூஜ்ஜியம் அளவிலேயே பங்குகள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், எந்தவொரு விவேகமுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் இவ்வளவு பெரிய அளவிலான பங்குகளைத் தன்னிச்சையாக மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற பங்குப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால், அவை மத்திய வங்கி மற்றும் செக்யூரிட்டீஸ் கமிஷன் (SC) போன்ற நிதி நிறுவனங்களால் உடனடியாக சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளாகக் கண்டறியப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, சின் பூன் லூங் என்று அழைக்கப்படும் விக்டர் சின், 40 பக்கங்கள் கொண்ட ஆவணம் ஒன்றை வெளியிட்டு, இந்த விவகாரத்தைத் தீர்க்க ஒரு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் 10 மில்லியன் ரிங்கிட் கேட்டதாகவும், அதில் 9.5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். வாக்குறுதி அளித்தபடி தீர்வு கிடைக்காததால் எஞ்சிய 500,000 ரிங்கிட் நிறுத்தப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் விக்டர் சின்னுக்கு ஆதரவாகச் செயல்படும் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியின் போக்கு வியப்பளிப்பதாக ரமணன் விமர்சித்தார்.
கட்சிக்கு எதிராக இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது, ஒரு உதவித் தலைவர் என்ற முறையில் கட்சியைக் காக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
ரபிஸி முறையான கட்சி வழிகளைப் பயன்படுத்தாமல் ஊடகங்கள் வாயிலாகப் பேசுவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அவர், இது ரபிஸியின் பழைய பழக்கம் என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் இது குறித்துப் பேசினீர்களா என்ற கேள்விக்கு, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சூழலில் பிரதமருக்கு இதைவிட முக்கியமான பணிகள் அதிகம் இருப்பதால், அவரிடம் இது குறித்துத் தாம் பேசவில்லை என்று ரமணன் பதிலளித்தார்.
இந்தக் கார்ப்பரேட் மாஃபியா விவகாரம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) உயர் அதிகாரிகள் சில தொழிலதிபர்களுடன் இணைந்து, பொதுப் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் நிர்வாகிகளை அச்சுறுத்தி அவர்களின் பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்க வற்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இக்குற்றச்சாட்டுகள் ஆணையத்தின் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சி என்று கூறி எம்.ஏ.சி.சி இதனை ஏற்கனவே மறுத்துள்ளது.

