
கோலாலம்பூர், மார்ச் 25 –
‘கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரத்துடன் தொடர்புடைய நபர்களைப் பாதுகாப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியின் போக்கு ஏமாற்றமளிப்பதாகக் கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மனிதவள அமைச்சருமான அவர் கூறுகையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அரசு நிறுவனங்களைக் குற்றம் சாட்டுவதையும், போதிய ஆதாரங்களின்றி பணமோசடி புகார்களை முன்வைப்பதையும் ரபிஸி வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“குறிப்பிட்ட நபர்களைப் பாதுகாப்பதன் மூலம் ரபிஸியின் நோக்கம் என்ன? இந்தச் சூழலில், அவர் சில தரப்பினரை ஆதரிப்பதுடன், அதற்காகத் தார்மீக அடிப்படையில் கட்சியையே விமர்சிக்கத் துணிந்துள்ளார். அவருடைய உண்மையான எண்ணம்தான் என்ன?” என்று இன்று சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் தமக்குத் தொடர்பு இருப்பதாக யாராவது கருதினால், ரபிஸி உட்பட எவராக இருந்தாலும் சரி, மறைமுகமாகப் பேசாமல் தனது பெயரை நேரடியாகக் குறிப்பிடட்டும் என்று சவால் விடுத்த சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரான ரமணன், அவ்வாறு ஆதாரமின்றிப் பேசினால் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் எச்சரித்தார்.
கட்சி ரீதியான உள் விசாரணை தேவையா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், தற்போது வரை எந்தவொரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறினார்.
“யாரும் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாத நிலையிலும், உண்மைகள் சரிபார்க்கப்படாத நிலையிலும், இந்த விவகாரம் உண்மையில் நடந்தது போன்ற ஒரு தோற்றத்தை ரபிஸி உருவாக்கி வருகிறார். இது கட்சியைப் பிளவுபடுத்தும் ஒரு ஆரோக்கியமற்ற செயல்முறையாகவே தெரிகிறது,” என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்பு இல்லாத போதிலும், சூழலைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட ரமணன், ரபிஸி ஒரு முன்னாள் துணைத் தலைவர் மற்றும் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் என்றும் விமர்சித்தார்.
“அவர் இத்தகைய கருத்துகளைத் தெரிவிக்கும்போது யாரும் பதிலளிக்கவில்லை என்றால், அந்தப் புகார்கள் உண்மை என மக்கள் நம்பக்கூடும். எனவேதான், யாராவது ஒருவர் முன்வந்து விளக்கமளிக்க வேண்டியுள்ளது. இத்தகைய சந்தேகங்கள் தொடர்ந்து நீடிக்க நாம் அனுமதிக்க முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
ரபிஸி தனிப்பட்ட முறையில் செயல்படுகிறாரா என்ற கேள்விக்கு, தாம் யூகங்களின் அடிப்படையில் பேச விரும்பவில்லை என்றும், உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே உண்மைகள் வெளிவர வேண்டும் என்றும் ரமணன் தெரிவித்தார்.

