விக்டர் சின் ஒரு கதாநாயகன் அல்ல, அவர் ஒரு ‘கார்ப்பரேட் சாத்தான்’; புகலிடம் தேடவே இத்தகைய நாடகம் – டத்தோஶ்ரீ ரமணன் காட்டம்

கோலாலம்பூர், மார்ச் 25 –
கார்ப்பரேட் மாஃபியா விவகாரத்தில் பல்வேறு புகார்களைக் கூறி வரும் தொழிலதிபர் விக்டர் சின் ஒரு ‘கதாநாயகன்’ அல்ல, மாறாக அவர் ஒரு ‘கார்ப்பரேட் சாத்தான்’ என்று கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சாடியுள்ளார்.

மனிதவள அமைச்சருமான அவர் கூறுகையில், விக்டர் சின் திட்டமிட்டே தன்னை ஒரு பாதிக்கப்பட்ட நபராகச் சித்தரித்து வருகிறார் என்றும், இதன் மூலம் அவர் இங்கிலாந்தில் அரசியல் புகலிடம் தேட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

“இது தன்னை ஒரு பலிகடாவாகக் காட்டிக்கொண்டு, இங்கிலாந்தில் அரசியல் புகலிடம் பெறுவதற்கான ஒரு தந்திரமாகும். அவர் அம்னோ, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், பேங்க் நெகாரா, காவல்துறை என அனைவர் மீதும் குற்றம் சுமத்துகிறார். ஒட்டுமொத்த அரசு அமைப்புகளையும் அவர் சாடுகிறார்,” என்று இன்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், விக்டர் சின் முன்வைக்கும் புகார்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகவும், இது அவருடைய நம்பகத்தன்மையைப் பெரிதும் பாதிப்பதாகவும் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு நாளும் ஒரு கதையைச் சொல்கிறார். இத்தகைய நபரின் கூற்றுகளுக்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? நாட்டின் அமலாக்கத் துறை மற்றும் நிதி நிறுவனங்கள் மீது ஒரே நேரத்தில் பழி சுமத்துவது, அவருடைய உண்மையான நோக்கத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், விக்டர் சின் ஏதோ உண்மையை நிலைநாட்டப் போராடும் ஒரு வீரரைப் போலச் சித்தரிக்கப்படுவதை ரமணன் வன்மையாக மறுத்தார்.

“விக்டர் ஒரு ஹீரோ அல்ல. அவர் ஒரு கார்ப்பரேட் சாத்தான். அவர் ஏதோ உண்மையைச் சொல்ல முன்வந்திருப்பதாக ஒரு மாயையை உருவாக்க வேண்டாம். இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் விளக்கப்படாமல் விடப்பட்டால், அது நாட்டின் நிறுவனங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதிக்கும்,” என்றார்.

மலேசியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் நாடு என்று குறிப்பிட்ட அவர், எத்தகைய புகாராக இருந்தாலும் அதற்கு முறையான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“உண்மை என்றால் அதை நிரூபியுங்கள். குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் புகார்களை மட்டும் வீசாதீர்கள். என் மீது ஏதாவது புகார் இருந்தால், ஆதாரத்துடன் நேரடியாக என் பெயரைச் சொல்லுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன். யூகங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்,” என்று டத்தோஶ்ரீ ரமணன் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles