
ஷா ஆலம், மார்ச் 26 – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையிலும், உள்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் என்ற மானிய விலையிலேயே தக்கவைக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 40 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இத்தகைய சவாலான சூழலிலும், ‘பூடி 95’ (BUDI95) திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்ந்து மானிய விலையில் பெட்ரோலைப் பெறுவதை நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், மானியமற்ற எரிபொருட்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மார்ச் 26 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை, RON97 பெட்ரோல் விலை 60 சென் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 5 ரிங்கிட் 15 சென் என விற்பனை செய்யப்படும். அதே வேளையில், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 80 சென் உயர்ந்து லிட்டருக்கு 5 ரிங்கிட் 52 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சபா, சரவாக் மற்றும் லாபுவான் பகுதிகளில் டீசல் விலை மாற்றமின்றி 2 ரிங்கிட் 15 சென்னாகவே நீடிக்கிறது. மேலும், மானியமற்ற RON95 பெட்ரோலின் விலை 60 சென் உயர்ந்து 3 ரிங்கிட் 87 சென்னாக அதிகரித்துள்ளது.
bernama

