மேற்கு ஆசியப் பதற்றம்: மாநிலத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் விளக்கக் கூட்டம் – பிரதமர்

ஷா ஆலம், 27 மார்ச்: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலையைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அடுத்த வாரம் அனைத்து மாநிலத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கான சிறப்பு விளக்கக் கூட்டம் ஒன்றைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) மற்றும் தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (MTEN) ஆகியவற்றின் மூலம் இந்தச் சிறப்பு விளக்கங்கள் அளிக்கப்படும் என்றும், இதன் வழி கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று புக்கிட் ஜெலுத்தோங் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர், அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

தற்போது வரை நாட்டில் எரிபொருள் பங்கீடு (Rationing) செய்யப்படவில்லை என்றும், ரோன்95 (RON95) பெட்ரோல் விலையில் திடீர் உயர்வு ஏதும் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், மே மாதம் வரை அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்துள்ளதாகவும், நிலைமையை அன்றாடம் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles