
கோலாலம்பூர் மார்ச் 30-
தினத்தந்தி (Thinathanti) இணையதள செய்தியாளர் களிதாஸ் சுப்பிரமணியம் இன்று கெடா கூலிம் மாவட்ட காவல் தலைமையகத்தில் (IPD Kulim) போலீசாரால் ‘அத்துமீறல்’ குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்த தகவலை அந்த இணையதளத்தின் இயக்குநர் பவளசெல்வன் மாரிமுத்து உறுதிப்படுத்தினார்.
இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்த தகவல் தமக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
பவளசெல்வன் கூறுகையில், கடந்த மார்ச் 26 ஆம் தேதி களிதாஸ் சுப்ரமணியம் உட்பட சில ஊடகவியலாளர்கள் சமூக ஏற்பாட்டாளர்கள் மற்றும் என்.ஜி.ஓ பிரதிநிதிகளுடன் சேர்ந்து கூலிம் ஹை-டெக் பார்க் (KHTP) பகுதிக்கு சென்றிருந்தார்.
“அங்கு 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்கள் (PATI) வேலை செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை பற்றிய செய்தி சேகரிக்கவே அவர்கள் சென்றிருந்தனர்.
“நாங்கள் சாதாரண Blog influencer அல்ல. நாங்கள் தகவல் துறை (Jabatan Penerangan) உடன் பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஊடக அட்டை வைத்திருக்கிறோம்.
இந்த கைது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது,” என்று அவர் Malaysiakini-க்கு தெரிவித்தார்.
மேலும், களிதாஸ் சுப்ரமணியம் இதற்கு முன்னர் கூலிம் IPD-யிலிருந்து வாக்குமூலம் அளிக்க அழைப்பு பெற்றிருந்தார் என்றும் அவர் கூறினார்.
போலீசார் அவரை தொடர்புகொண்டு வாக்குமூலம் அளிக்க வரச் சொன்னார்கள். காரணம் என்ன என்று கேட்டபோது, ‘அத்துமீறல்’ குற்றச்சாட்டு தொடர்பானது என்று தெரிவித்தனர்.
“ஆனால் இன்று அவர் காவல் நிலையத்திற்கு சென்ற பிறகு, மேல் விசாரணைக்காக கைது செய்ததாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டதுஎன்றார்.
களிதாஸ் உடன் மேலும் ஏழு பேர் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை பெற Malaysiakini கூலிம் IPD-யை தொடர்புகொண்டுள்ளது; பதிலுக்கு காத்திருக்கிறது.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் உடனடி விடுதலை கோரிக்கை….
இதற்கிடையில், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் , இந்த கைது நடவடிக்கைக்கு அதிருப்தி மற்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
“ஒரு செய்தியாளராக தனது கடமையைச் செய்ததற்காக அவரை கைது செய்வது தேவையற்றது. அவரிடம் வாக்குமூலம் பெறுவது போதுமானது,” என்று அவர் Malaysiakini-க்கு தெரிவித்தார்.
மேலும், களிதாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அவரிடம் செல்லுபடியாகும் ஊடக அட்டை உள்ளது. இந்த விஷயம் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அமைச்சரான ஃபஹ்மி ஃபட்சில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,” என்றார்.
இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகத்தையும் (KDN) Malaysiakini தொடர்புகொண்டு விளக்கம் கேட்டு வருகிறது.

