
கோலாலம்பூர், ஏப் 7-
அனைத்து பாதுகாப்பு மற்றும் தகவல் அமைப்புகளையும் ஒரே இடத்தில் இணைத்து, அபாயங்களை உடனுக்குடன் கண்டறிந்து, சுயமாக செயல்படும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நவீன கட்டுப்பாட்டு மையத்தை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ திறந்து வைத்தார்.
மலேசியாவில் முதல் முறையாக அறிமுகம் காணும் இந்தப் பாதுகாப்பு திட்டத்தை Standard Chartered- உலகளாவிய வணிகச் சேவைகள் (குளோபல் பிசினஸ் சர்வீசஸ்) நிறுவன வங்கி உருவாக்கியுள்ளது. இந்த முக்கிய நிகழ்வு, மேம்பட்ட இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவைகளுக்கான நம்பகமான மற்றும் முன்னுரிமை பெற்ற மையமாக மலேசியா உருவாகியுள்ளதை புலப்படுத்துகிறது என கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த மையம் 50க்கும் மேற்பட்ட உலக சந்தைகளில் ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியின் செயல்பாடுகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தி, அச்சுறுத்தல்களை விரைவாக கண்டறியவும் உடனுக்குடன் பதிலளிக்கவும் உதவும். பல்கிவரும் சிக்கலான உலகளாவிய சூழலுக்கு மத்தியில் மீள்திறனை வலுப்படுத்துவதில் நாட்டின் அர்ப்பணிப்பும் இதில் அடங்கும். சிக்கலான உலகளாவிய சூழ்நிலைகளில் கூட நாட்டின் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார தாங்கும்திறனை வலுப்படுத்தும் உறுதிப்பாட்டையும் மலேசிய கொண்டுள்ளதை இது பிரதிபலிக்கிறது.
தனது தொடக்க உரையில், உலகப் பொருளாதார மாற்றத்தால் , உருவாகிவரும் பாதுகாப்புச் சவால்கள் மற்றும் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள், எரிசக்தி விலைகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் சந்தை நிலைத்தன்மை ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இத்தகைய சூழலில் கூட, மலேசியாவின் அணுகுமுறை தெளிவானது. நமது தேசிய நலன்களையும் நமது மக்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், நிலைத்தன்மை, நிதானம் மற்றும் ஆக்கப்பூர்வமாக மலேசியா செயல்படுகிறது என அமைச்சர் சொன்னார்.
அரசாங்கமானது பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் பிரதமர் தலைமையில் வாரந்தோறும் நடைபெறும் தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (NEAC) கூட்டங்கள் வழி பாதிப்புகளை முன்கூட்டியே கையாளும் திறன்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.
இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, விநியோக நிலைத்தன்மையை நிர்வகிப்பது முதல் செலவுப் பாதிப்புகளைத் தணிப்பது வரை, முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுக்க உதவுவதாகவும், இதன் வழி ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ போன்ற நிறுவனங்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படவும், மலேசியர்களை வெளித்தாக்கங்களிலிருந்து இயன்றவரை பாதுகாக்கவும் முடிகிறது என கோபிந்த் சிங் டியோ கூறினார்.
இன்று தொடக்கம் கண்ட சைபர் பாதுகாப்பு, தரவு பகுப்பாய்வு மற்றும் நேரடி அபாய கண்காணிப்பை ஒருங்கிணைக்கும் இந்த மையம் இலக்கவியல் தொசில் நுட்பத் துறையில் நமது நாடு முன்னேறி வருவதை புலப்படுத்துகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் 30% இலக்கை அடையும் பாதையில் மலேசியாவின் இலக்கவியல் பொருளாதாரம் முன்னேறி வருவதை அமைச்சர் கூறிப்பிட்டார்.
இந்த முன்னேற்றம், 2025ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட RM426.7 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளைப் பெற்றதன் வழி பிரதிபலிக்கிறது. இது நமது நாட்டின் வரலாற்றில் இதுவரை காணாத சாதனையாகும் என கோபிந்த் சிங் கூறினார்.
25 ஆண்டுகளுக்கு முன், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் GBS ஒரு பாரம்பரிய அலுவலக மையத்திலிருந்து உருவாகி, புத்தக்கத்தின் வழி உலகெங்கிலும் 50-க்கும் மேற்பட்ட சந்தைகளுக்கு ஆதரவளிக்கும் மேம்பாடுகண்ட தொழில்நுட்பப் பிரிவாகப் பரிணமித்துள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சி, பணப் பரிவர்த்தணை பொருளாதாரத்திலிருந்து மதிப்பு, புதுமை மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றால் இயக்கப்படும் பொருளாதாரமாக மாறி மலேசியாவின் உருமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
மலேசியாவின் GBS எனப்படும் உலகளாவிய வணிகச் சேவைத் துறை, அண்மைய ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது; 2022-ஆம் ஆண்டிலிருந்து நிறுவனங்களின் எண்ணிக்கை 66.8% அதிகரித்து, தற்போது 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது. முதலீடுகள் 2021-ல் RM730 மில்லியனிலிருந்து 2024-ல் RM9.87 பில்லியனாக உயர்ந்துள்ளன.
தொடர்ச்சியான புத்தாக்கம், திறன் மேம்பாடு மற்றும் தக்கவைக்கப்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றின் வழி, உலகளாவிய சேவைகள் குறியீட்டில் மலேசிய தற்போது 3வது இடத்தில் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
கடந்த 25 ஆண்டுகளில், ஸ்டாண்டர்ட் சார்டர்ட் GBS மலேசியா பாரம்பரிய பணபரிவர்த்தணை மையத்திலிருந்து உயர்தர உலகளாவிய தொழில்நுட்ப மையமாக வளர்ந்துள்ளது. தற்போது சுமார் 4,000 பணியாளர்களைக் கொண்ட இந்த அமைப்பில் பெரும்பாலானோர் மலேசியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

