
செகாமட், ஏப்ரல் 7- கடந்த வாரம் கெமாஸ் பாரு, தாமான் கோல்டன் ஹில் சந்திப்புக்கு அருகிலுள்ள ஜோகூர் பாரு-சிரம்பான் சாலையின் 212வது கிலோமீட்டரில் மூன்று பேரைக் கொண்ட ஒரு குடும்பத்தின் மரணத்திற்குக் காரணமான டிரெய்லர் லோரி ஓட்டுநர் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட 29 வயதான முஹமட் ஷாபிக் சல்லே, மாஜிஸ்திரேட் அமலினா ஜோஹர் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அவர் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார்.
இருப்பினும், இந்த வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில், 72, வயது கி. மியாகிருஷ்ணன், அவரது மனைவி, எஸ். செவந்தை, 65, மற்றும் செவந்தியின் சகோதரர், எஸ். பழனியாண்டி, 75, ஆகியோரைக் கொலை செய்ததாக அவர் மீதுகுற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்திற்காக, மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மற்றும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தபட்சம் 12 பிரம்படி ஆகியவற்றை வழங்கும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப் படவில்லை.

