
கல்வியில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு இருக்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தற்போது கல்வி அமைச்சு கொண்டு வந்துள்ள “பள்ளி சார் மதிப்பீடு” கல்வி முறையை மாணவர்கள் எந்த அளவுக்கு உள்வாங்கியுள்ளனர் என்றும் அதே நேரத்தில் பெற்றோர்கள் அதனை எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளனர் என்பதையும் ஆய்வு செய்து வருவதாக ஸ்ரீ முருகன் கல்வி நிலைய இணை இயக்குனர் சுரேந்திரன் கந்தசாமி தெரிவித்தார்.
தற்போது யுபிஎஸ்ஆர் தேர்வு முறை இல்லாத பட்சத்தில் பள்ளி சார் மதிப்பீடு கல்வி முறை கல்வி அமைச்சால் கொண்டுவரப்பட்டுள்ளது .
அந்த வகையில் இந்த மதிப்பீடு முறையை பெற்றோர்கள் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள “பெற்றோர் எண்ணத்தோடு ஓர் உரையாடல்” என்ற சந்திப்பை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தங்களது கல்வி நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்தது,
இதன் வாயிலாக பெற்றோர்கள் எந்த அளவுக்கு பள்ளி சார் மதிப்பீடு முறையை புரிந்து கொண்டுள்ளனர் அவர்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்த பெற்றோர்களின் பங்களிப்பு என்னென்ன, மாணவர்களுக்கு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் என்னென்ன புதிய யுக்தியை வரையறை செய்துள்ளது ,கல்வி சார்ந்து புதிய நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ளப் போகிறது போன்ற தகவல்கள் பரிமாறப்பட்டதாக சுரேந்திரன் கந்தசாமி தெரிவித்தார் .

