
கோலாலம்பூர், ஏப்ரல் 16 – உலகளவில் தீவிரமடைந்து வரும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், அதன் தாக்கம் மலேசிய மக்களைப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம் (MTEN) தெளிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோனாஸ் (PETRONAS) நிறுவனத்தின் முக்கிய பங்களிப்புடன், வரும் காலங்களில் எரிசக்தி மற்றும் அடிப்படைப் பொருட்களின் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்கும் வகையில், நெற்பயிர் விவசாயிகள், சிறுதோட்ட உரிமையாளர்கள் மற்றும் தனிநபர் வாகன உரிமையாளர்களுக்குக் கூடுதல் டீசல் மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இது குறித்துத் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் மக்களின் நலனைப் பாதுகாப்பதே என்றும், அதே வேளையில் பொருளாதார ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து யதார்த்தமான முடிவுகளை எடுப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
Bernama

