
புத்ராஜெயா, ஏப்ரல் 23: மலேசியாவில் அரசுப் பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ (BDR) திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமார் 6 லட்சத்து 78 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலான காலப்பகுதியில், சுமார் 1 இலட்சத்து 55 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் இந்த விவரங்களைச் சமர்ப்பித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த தகவல் தொடர்பு அமைச்சரும், மடாணி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சத்து 34 ஆயிரம் லிட்டர் எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

