
வாஷிங்டன், ஏப்ரல் 23 – மேற்கு ஆசியாவில் மோதல் முடிவுக்கு வரும்போது, நாட்டில் பெட்ரோல் விலை குறையும் என எதிர்பார்க்கப் படுவதாக அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெஸ்ஸென்ட் புதன்கிழமை தெரிவித்தார்.
செனட் விசாரணையின் போது, பெட்ரோல் விலை எவ்வளவு விரைவில் குறையக்கூடும் என்று கேட்கப் பட்டதற்கு, “எல்லாம் மோதல் எப்போது முடிகிறது என்பதைப் பொறுத்தது,” என்று அவர் கூறினார்.
விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பும் அல்லது இன்னும் குறைவாக கூட இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரான் உட்பட ஈரானில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடங்கின. இது சேதங்களையும் பொது மக்களின் மரணங்களையும் ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேலியப் பகுதிகளையும் மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் தாக்கியது.
இந்த பதற்றம் அதிகரித்ததால், பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து உலகச் சந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான ஒரு முக்கிய வழியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து கிட்டத்தட்ட ஸ்தம்பித்தது. இது எரிபொருள் விலைகளை உயர்த்தியது.

