போதையில் வாகனம் ஓட்டி சிவப்பு விளக்கை மீறிய குற்றத்திற்காக, பெண் ஓட்டுநருக்கு ஒருநாள் சிறைத் தண்டனை, RM13,000 அபராதம்

கோலாலம்பூர், ஏப் 23-

மது போதையில் வாகனம் ஓட்டி சிவப்பு விளக்கை மீறிய குற்றத்திற்காக, பெண் ஓட்டுநர் ஒருவருக்கு கோலாலம்பூர் போக்குவரத்து நீதிமன்றம் ஒருநாள் சிறைத்தண்டனையும், RM 13,000 அபராதமும் விதித்தது.

இந்த வழக்கில், 42 வயதான அப்பெண் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அபராதத்தை செலுத்தத் தவறினால், அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப் படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் இரண்டு ஆண்டுகளுக்குத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 45A(1)-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதி, குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமட் சம்ஸூரி முகமட் ஈசா தெரிவித்தார்.

ஜாலான் கெந்திங் கிளாங்கில் உள்ள போக்குவரத்து விளக்கு சந்திப்பில் இரவு 8.22 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அவர் கூறினார். இதில் BMW X1 ரக மகிழுந்து ஒன்றும், யமஹா LC135 ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும் சம்பந்தப் பட்டிருந்தன.

“ஆரம்பக்கட்ட விசாரணையில், மகிழுந்தை ஓட்டிவந்த அப்பெண்மணி, சிவப்பு விளக்கு எரிந்தபோது நிற்கத் தவறி, பச்சை விளக்கில் நேராகச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது தெரியவந்துள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles