
அலோர் காஜா: ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சியை எளிதாக்கும் வகையில், நிர்வாக டிஜிட்டல் தலைமைத்துவப் (EDP) பயிற்சி மையங்களை மாநில அளவில் திறப்பதற்கான நடவடிக்கைகளை டிஜிட்டல் அமைச்சு விவாதித்து வருவதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
தற்போது இந்தப் பயிற்சி மையம் கோலாலம்பூரில் மட்டுமே அமைந்துள்ளது என்றும், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து மூன்று மாதங்கள் பயிற்சி பெற வேண்டிய பங்கேற்பாளர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
“தரவுகளைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வேலைத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்குச் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதில் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் இந்த இடிபி திட்டம் கவனம் செலுத்துகிறது,” என்றார்.

“உதாரணமாக, ஒரு ஆசிரியர் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், அவர் தனது மாணவர்களின் திறனைத் தரவுகளின் அடிப்படையில் கண்டறிந்து, அவர்களின் எதிர்கால திசை குறித்து மிகவும் துல்லியமான முடிவுகளை எடுக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
சிம்பாங் அம்பாட்டில் இன்று நடைபெற்ற மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ‘மடாணி கல்விச் சீர்திருத்தம் 2026-ஐ நோக்கிய டிஜிட்டல் தலைமைத்துவ கருத்தரங்கில்’ கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். நேற்று தொடங்கிய மூன்று நாள் கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 470 தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

