
கோலாலம்பூர் மே 10-
மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மேலும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.
இதற்கு முன்பு 100 மில்லியனாக இருந்த மித்ரா நிதி இப்போது 150 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய மாணவர்களுடன் பிரதமர் என்ற நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த இனிப்பான செய்தியை அறிவிப்பு செய்தார்.
மலேசிய இந்திய சமூக பொருளாதார மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் இந்த நிதி அமைந்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் வழங்கி வரும் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என்று முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.
மித்ரா நிதி உயர்த்தப்பட வேண்டும் என்பது இந்திய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையாகும்.
இந்திய சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இந்த நிதி உயர்வு அமைந்துள்ளது.
கூடுதலாக கிடைக்கப்பெற்ற இந்த 50 மில்லியன் ரிங்கிட் இந்திய சமுதாயத்திற்கு பல வகைகளில் பேருதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
இந்த தருணத்தில் இந்த நிதியை பெற்றுத் தந்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் மிகவும் பாராட்டுக்குரியவர்.
அவருக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய சமுதாயத்தின் தேவைகளை உணர்ந்து மடானி அரசாங்கம் மேலும் பல நிதியுதவிகளை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

