ஆலய விவகாரங்களுக்கு கூட்டு முயற்சியில் தீர்வு காணஅமைச்சரவை இணக்கம்! -அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

கோலாலம்பூர்,மே 11-
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மத்திய அரசாங்கத்தால் மட்டும் தீர்வு காண முடியாது.

மாறாக அது தொடர்பான பல்வேறு இலாகாக்கள், மாநில அரசுகள் எனும் கூட்டு முயற்சியால் மட்டுமே எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
.
முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக இந்து ஆலய விவகாரங்கள் வெறும் அமைச்சரவையை மட்டும் சார்ந்ததல்ல.

ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலம், ஆர்ஓஎஸ் பதிவு, ஊராட்சி மன்றங்களின் அங்கீகாரம் ஆகிய பல விவகாரங்கள் இதில் உள்ளன.
நில விவகாரங்கள் யாவும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனன். ஆலய பதிவு அனைத்தும் ஆர்ஓஎஸ் வசம் உள்ளது.

அந்த ஆலயங்களின் அங்கீகாரம் தொடர்பான அனைத்து அனுமதிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களில் அங்கீகாரத்திற்கு உட்பட்டது.
ஆலய விவகாரங்களை தீர்க்க பல இலாகாக்கள் ஒன்றிணைந்து கூட்டாக முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.

அப்போதுதான் அதற்கான தீர்வை காண முடியும் என்று ஜாலான் மஸ்திட் இந்தியாவில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய 133ஆவது வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் லிமாஸ் அமைப்பு இருப்பது போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாம் அல்லாதோர் விவகாரப் பிரிவின் மூலம் ஆலய விவகாரங்களை கையாள முடியும் என்று அவர் சொன்னார்.

அதே வேளையில் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் புதிய இடத்தில் இடமாற்றம் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்பு இவ்வாலய இடமாற்ற விவகாரம் சர்ச்சையாக வெடித்தபோது அதனை சுமூகமாக தீர்வு காண ஆலய நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கியதை நினைவுக் கூர்ந்த கோபிந்த் சிங், புதிய ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

இதனிடையே, ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்று ஆலயத் தலைவர் டாக்டர் க.பார்த்திபன் தெரிவித்தார்.

இவ்வாலயம் புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கு ஏதுவாக அடித்தள வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆலயப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு ஓராண்டுக்குள் ஆலயப் பணிகள் நிறைவு பெற ஆலய நிர்வாகம் இலக்குக் கொண்டுள்ளது.

ஆலயத் திருப்பணி நிறைவு பெற பொதுமக்களின் உதவியை ஆலய நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்றும் பார்த்திபன் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles