
கோலாலம்பூர், மே 21– மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) தனது 80ஆம் ஆண்டு நிறைவு பொன்விழாவை 2026ஆம் ஆண்டு நாடு முழுவதும் மிக விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.
1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மஇகா, நாட்டின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே இந்திய சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து, தேசிய முன்னணி கூட்டணியின் முக்கிய அங்கமாகச் செயல்பட்டு வந்துள்ளது.
80ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மஇகா சார்பில் 9 முக்கியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது. கட்சி பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர் கொண்ட காலங்களிலும், அதனை உறுதியாக முன்னெடுத்துச் சென்ற பெருமை தேசியத் தலைவர் தான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கே சேரும் எனக் கட்சித் தொண்டர்கள் பாராட்டினர்.
மஇகா இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு அடிமட்டத் தலைவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக பதவிகளை எதிர்பாராமல் உழைத்த தொண்டர்களின் அர்ப்பணிப்பே முக்கிய காரணம் என செபூத்தேவைச் சேர்ந்த எஸ்.எஸ். இராமமூர்த்தி தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சிகளில் கட்சிக்காக உழைத்த மூத்த அரசியல் தலைவர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்தின் பிரச்சினைகளில் எப்போதும் முன்னணியில் இருந்து உதவிக்கரம் நீட்டிவரும் மஇகா, குறிப்பாக கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் டேப் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் ஆதரவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஇகாவின் 80ஆம் ஆண்டு பொன்விழா, கட்சியின் வரலாற்றுப் பயணத்தையும் சமூகப் பங்களிப்பையும் நினைவுகூரும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

