





மஞ்சோங், மே 25- சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற டத்தோ அ.சிவநேசன் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்க மைதானத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மஞ்சோங் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றம், சித்தியவான் ரேஞ்சர்ஸ் எஃப்சி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த போட்டிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் பிரதிநிதியாக பந்தாய் ரெமிஸ் சட்டமன்ற உறுப்பினர் வோங் மேய் இங் கலந்து கொண்டு இப்போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத் தலைவர் மகாலிங்கம் கோவிந்தசாமி பேசுகையில், இந்திய மாணவர்களும், இளைஞர்களும் மாவட்டம், மாநிலம் மட்டுமன்றி தேசியம், உலகளாவிய நிலையிலும் கால்பந்து வீரர்களாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இந்தப் போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக சொன்னார்.
இம்முறை மஞ்சோங், கீழ்ப்பேராக், பாகான் டத்தோ, பத்தாங் பாடாங் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றது பெருமைக்குரியது என்றார் அவர்.
12 வயதிற்குட்பட்ட இந்த கால்பந்தாட்டத்தில் ஆண்கள் பிரிவில் 17 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 19 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 11 அணிகளும் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்கின.
ஆண்கள் பிரிவில் பாரதி தமிழ்ப்பள்ளி முதலிடத்தை கைப்பற்றி டத்தோ அ.சிவநேசன் சுழற்கிண்ணத்தையும், கோப்பையும், பதக்கங்களையும் நற்சான்றிதழும் வென்ற நிலையில் மகா கணேசா வித்யாசாலை அணியினர் இரண்டாம் இடத்தையும், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி அணியினர் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றி கோப்பைகளையும், பதக்கங்களையும், நற்சான்றிதழும் வென்றனர்.
அதேபோல் பெண்கள் பிரிவில் கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி அணியினர் முதலிடம் பிடித்து டத்தோ சிவநேசன் சுழற்கிண்ணத்தையும்,கோப்பையும், பதக்கங்களும் தட்டிச் சென்ற நிலையில் பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி அணியினர் இரண்டாம் இடத்தையும், வால்புரோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்று கோப்பைகளையும், பதக்கங்களையும், நற்சான்றிதழும் பெற்றனர்.
அதோடு ஆண்கள் பிரிவில் மகா கணேசா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனன் ஜெரெமியா ராஜ் கிருஷ்ணன் சிறந்த கோல் காவலராகவும், பாரதி தமிழ்ப்பள்ளி மாணவன் சர்வின் முத்துக்குமார் சிறந்த கால்பந்தாட்ட விளையாட்டாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதேபோல் பெண்கள் பிரிவில் பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி ஹஸ்வினி சிவநேசன் சிறந்த கோல் காவலராகவும், கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி டாஷினி சசிதரன் சிறந்த கால்பந்தாட்ட விளையாட்டாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்க ஊக்கமளிக்கும் வகையில்
இந்தக் கால்பந்தாட்ட நிகழ்ச்சிக்கு 20,000 ரிங்கிட் நன்கொடை வழங்கியதோடு வருடந்தோறும் நடத்தப்பட்டு வரும் கால்பந்தாட்டப் போட்டிக்குத் தொடர்ந்து ஆதரவு நல்கிவரும் டத்தோ சிவநேசனுக்கு, சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மலேசிய கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன், மஞ்சோங் மாவட்ட கல்வி இலாகாவின் அதிகாரிகள், மஞ்சோங் மாவட்டத் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் சுப்ரணியம் ரெங்கசாமி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தேசிய கால்பந்தாட்டப் பயிற்றுநர் நந்தகுமார் காளியப்பன், பெற்றோர் மாணவர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

