மலேசியா – இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் ரமணன் உறுதி

கோலாலம்பூர், மே 25-
மலேசியா – இந்தியா இடையிலான நட்புறவும் கூட்டுழைப்பும் இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கான இந்திய தூதர் மேதகு பி.என். ரெட்டி, விரைவில் தனது தூதரகப் பணியை நிறைவு செய்யவிருப்பதையொட்டி, இன்று அமைச்சரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து விடைபெற்றார். இந்தச் சந்திப்பு குறித்து டத்தோஸ்ரீ ரமணன் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரு நாடுகளும் மிக முக்கியமான பங்காளிகளாக விளங்கும் சூழலில், இந்தச் சந்திப்பு எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாட நல்லதொரு வாய்ப்பாக அமைந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“மலேசியாவும் இந்தியாவும் மிக நெருங்கிய பங்காளிகளாக இருக்கும் வேளையில், இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் எதிர்கால பரஸ்பர உறவு குறித்து பல நல்ல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வழிவகுத்தது,” என்று ரமணன் கூறியுள்ளார்.

மலேசியாவில் பணியாற்றிய காலத்தில் இருநாட்டு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பி.என். ரெட்டி ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்கும், காட்டிய அர்ப்பணிப்பிற்கும் அமைச்சர் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்திய தூதர் வெறும் அலுவல் ரீதியான உறவை மட்டும் பேணாமல், இரு நாடுகளுக்கும் இடையே ஆழ்ந்த மரியாதையையும், நம்பிக்கையையும் கொண்ட ஒரு நல்ல நட்புப் பாலத்தை உருவாக்கியுள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

மக்களுக்கு ஒரு சிறந்த மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க, ஏற்கனவே உருவான இந்த பலமான நட்புறவை மலேசியா தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் அமைச்சர் ரமணன் உறுதியளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles