காலிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் – மொரோக்கோ அணிகள்

நியூயார்க்: ஜூலை 5-
உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் ‘ரவுண்ட் – 16’ நாக்-அவுட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.

இன்று அதிகாலை நடைபெற்ற பரபரப்பான ஆட்டங்களில் மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் அணிகள் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறின.

கனடா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆரம்பம் முதலே மொரோக்கோ வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.இருப்பினும், இரண்டாம் பாதியில் மொரோக்கோ அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் அசெடின் உனாஹி முதல் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து கனடா அணிக்கு நெருக்கடி கொடுத்த உனாஹி, 82ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+8 வது நிமிடம்) சுபியான் ரஹிமி தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, மொரோக்கோ அணி 3 – 0 என்ற கணக்கில் கனடாவை துவம்சம் செய்து கம்பீரமாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.

எம்பாப்பே ‘பெனால்டி’ மேஜிக்… தப்பித்தது பிரான்ஸ்!

மற்றொரு நாக்-அவுட் போட்டியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிரான்ஸ் அணி, பராகுவே அணியை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த பிரான்ஸ் அணிக்கு பராகுவே வீரர்கள் தங்களது அசாத்திய தடுப்பாட்டத்தால் கடும் சவால் அளித்தனர்.

இதனால் ஆட்டத்தின் பெரும்பகுதி கோல் ஏதுமின்றி வறட்சியாகவே சென்றது.

ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பொன்னான ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய கிலியன் எம்பாப்வெ, பந்தை லாவகமாக கோல் வலைக்குள் திணித்தார்.

இதன் மூலம் பிரான்ஸ் அணி 1 – 0 என்ற கணக்கில் நூலிழையில் வெற்றி பெற்று, காலிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.

பராகுவே அணி போராடி தோல்வியடைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles