ஜொகூர் இந்திய சமூகத்தின் உடனடி கோரிக்கை: இம்பியான் எமாஸ் மற்றும் தாமான் யுனிவர்சிட்டி தமிழ்ப்பள்ளிகள் உடனடியாக கட்டப்பட வேண்டும்

ஜொகூர் பாரு ஜூலை 5-
ஜொகூரின் கெம்பாஸ் மற்றும் தாமான் யுனிவர்சிட்டி பகுதிகளில் வசித்து வரும் இந்திய சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கையான எஸ்ஜேகே(டி) இம்பியான் எமாஸ், கெம்பாஸ் மற்றும் எஸ்ஜேகே(டி) தாமான் யுனிவர்சிட்டி ஆகிய தமிழ்ப்பள்ளிகள் இனியும் தாமதமின்றி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பல ஆண்டுகளாக இந்த இரு பள்ளிகளைப் பற்றிய அறிவிப்புகள், வாக்குறுதிகள் மற்றும் அரசியல் பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

நிலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகவும், நிலம் கெசட் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

எனவே, இந்திய சமூகம் பின்வரும் கேள்விகளுக்கு தெளிவான பதில்களையும் உடனடி நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கிறது.

  1. இந்த இரு தமிழ்ப்பள்ளிகளின் தற்போதைய நிலை என்ன?
    இம்பியான் எமாஸ், கெம்பாஸ் தமிழ்ப்பள்ளி மற்றும் தாமான் யுனிவர்சிட்டி தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் கட்டுமானத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? கட்டுமானம் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும்? என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  2. புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைசான் காயாட் அவர்களுக்கு
    இம்பியான் எமாஸ் தமிழ்ப்பள்ளி உங்கள் புலாய் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அமைந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசுவது மட்டும் போதாது. அந்தப் பள்ளி கட்டுமானம் தொடங்குவதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பாகும்.
  3. பல இனக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு
    பல இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அரசியல் கட்சியின் தலைவர்களாக, இந்திய சமூகத்திற்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை வழங்கியதாலேயே உங்கள் பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம். இந்திய சமூகம் அரசியல் பிரதிநிதித்துவத்தை மட்டுமல்ல, செயல்படும் தலைமைத்துவத்தையும் உறுதியான நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கிறது.
  4. துணை நிதி அமைச்சர் லியூ சின் தோங் அவர்களுக்கு
    நீங்கள் உண்மையிலேயே உங்கள் கட்சியில் உள்ள இந்திய உறுப்பினர்களின் மற்றும் நாடு முழுவதும் உள்ள இந்திய சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டிருந்தால், ஜூலை 11-ஆம் தேதிக்குள் இந்த இரு தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்கி அறிவிக்க வேண்டும்.
  5. ஜோகூர் முதலமைச்சர் ஒன் ஹாபிஸ் காசி அவர்களுக்கு
    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரு பள்ளிகளுக்கான நில ஒதுக்கீடு குறித்து மிகப்பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை வெளியிட்டதோடு உங்கள் பொறுப்பு முடிந்துவிட்டதாக கருதுகிறீர்களா? நிலம் ஒதுக்கப்பட்டிருந்தால், கட்டுமானம் ஏன் இன்னும் தொடங்கவில்லை?
  6. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராவின் குமார் கிருஷ்ணசாமி,
    தமிழர் சமூகத்தின் காவலராகத் தங்களை அடிக்கடி முன்னிறுத்திக் கொள்ளும் ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான நீங்கள், வெறும் அறிக்கைகள் வெளியிடுவதோடு உங்கள் பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இந்திய சமூகம் வார்த்தைகளை அல்ல, செயல்பாடுகளை எதிர்பார்க்கிறது.
  7. 2024 புலாய் இடைத்தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது?
    2024 ஆம் ஆண்டு நடைபெற்ற புலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலின்போது, அம்னோ மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இரு தரப்பினரும் இந்த இரு தமிழ்ப்பள்ளிகளையும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக முன்னிறுத்தினர். நிலம் கெசட் செய்யப்பட்டுவிட்டதாகவும் அறிவித்தனர். ஆனால் அதன் பின்னர் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.
    அந்த வாக்குறுதிகள் என்ன ஆனது?
    ஜோகூர் இந்திய சமூகம் நீண்ட காலமாக பொறுமையாகக் காத்திருக்கிறது. இந்தப் பள்ளிகள் அரசியல் பிரச்சாரத்திற்கான கருவிகள் அல்ல; நமது பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கான அடிப்படைத் தேவையாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தலைவர்களும் இனியும் காலதாமதம் செய்யாமல், இந்த இரு தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானத் தொடக்க தேதி, நிதி ஒதுக்கீடு மற்றும் முழுமையான செயல்திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இந்திய சமூகம் இனி வெறும் வாக்குறுதிகளை அல்ல, உறுதியான செயல்பாடுகளையே எதிர்பார்க்கிறது.
“பேச்சு போதும்… செயலில் இறங்குங்கள்!”

சமூக ஆர்வலர்
சந்திரசேகரன் ஆறுமுகம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles