
கோலாலம்பூர், ஜூலை 6-
நாட்டில் உள்ள இந்திய தொழில் துறைகள் அந்நியத் தொழிலாளர்களை பெற்றுக் கொள்ள நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் கேட்டுக் கொண்டார்.
அந்நியத் தொழிலாளர்களுக்கான இந்திய தொழில் துறைகளின் விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்படும்.
குறிப்பாக இந்திய உணவகங்கள், முடித் திருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள், உலோக பொருள் மறுசுழற்சி உரிமையாளர்கள் உட்பட இந்திய தொழில் துறைகள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள், அந்நியத் தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பில் (FWCMS) உள்ள eQuota மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் முதலாளிகள், நிறுவனங்கள் இன்று முதல் நேரடியாக இதன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
குறிப்பாக நடுவில் எந்தவொரு தரப்பினரும் இல்லாமல் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம்.
அவ்வகையில் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் இந்திய தொழில் துறைகளும் இதன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையாக ஆராயப்பட்டு உரிய அனுமதி வழங்கப்படும்.
ஆக அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்று சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக உண்மையாகவே தேவைப்படும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு மட்டுமே கோரிக்கையை முன்வையுங்கள்.
1000 பேரை கேட்கும் இடத்தில் உண்மையில் 10 பேர் மட்டுமே தேவைப்படுவார்கள்.
உங்களுக்கு உண்மையிலேயே எவ்வளவு அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

