வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ‘லிண்டுங் 24 ஜாம்’ திட்டம் கட்டாயம்: – டத்தோஶ்ரீ ரமணன்

புத்ராஜெயா, ஜூலை 9 –
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) ‘லிண்டுங் 24 ஜாம்’ திட்டத்திற்கான பங்களிப்பு தொடர்ந்து கட்டாயமானது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கருத்துகளைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவை எடுத்த முடிவைத் தொடர்ந்து, உள்ளூர் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் இனி கட்டாயமல்ல என்றும், அவர்கள் விருப்பத்தின் பேரில் பங்களிப்பு செய்யலாம் என்றும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தின் மூலம், உள்ளூர் தொழிலாளர்கள் தங்கள் தேவை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்தத் திட்டத்தில் சேருவதைத் தீர்மானிக்கலாம்.

இதற்கான செயல்பாட்டு முறைகள் மற்றும் பதிவு செய்யும் நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களை பெர்கெசோ விரைவில் அறிவிக்கும் என்று அவர் கூறினார்.

அதேவேளையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் தொடர்ந்து கட்டாயமானது என்றும், தற்போதுள்ள சட்ட விதிகளின்படி இது அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

வேலை நேரத்திற்குப் பிறகு மற்றும் பணியிடத்திற்கு வெளியே ஏற்படும் விபத்துகளிலிருந்து தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் இந்தத் திட்டம், ஒரு முக்கியமான சமூகப் பாதுகாப்பு முயற்சியாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இத்திட்டத்தின் தாக்கம், செயல்திறன் மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மை குறித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் மனிதவள அமைச்சு மறுஆய்வு செய்யும் என்றும், தேவைப்பட்டால் 1969-ஆம் ஆண்டின் தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டத்தில் (சட்டம் 4) திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles