
ஜொகூர் மாநில மக்கள், ஜனநாயக செயல்முறையில் பங்கேற்றதற்காக, ஜனநாயக செயல் கட்சி (ஜசெக) மத்திய செயற்குழு அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் தேர்தலில் 69.6 விழுக்காட்டு வாக்கு பதிவாகியுள்ளது.
நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்கள் அனைவருக்கும், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பி வாக்களித்தவர்களுக்கும், தங்களது சொந்த ஊர்களில் வாக்களித்தவர்களுக்கும் எங்களது நன்றியைப் பதிவு செய்கிறோம். குறிப்பாக, ஜசெக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்த 291 ஆயிரத்து 273 ஜொகூர் மக்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு வாக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, பொறுப்பைச் சுமந்து வருகிறது.
ஜொகூருக்குப் பின்னர், எங்களது கவனம் தற்போது நெகிரி செம்பிலானை நோக்கித் திரும்பியுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும். அதேவேளை, ஜசெக தனது 11 தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ளப் போட்டியிடும். இதில் எட்டு தொகுதிகளில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும் மூன்று புதிய முகங்களும் இடம்பெறுகின்றனர்.
தற்போதைய மாநில அரசின் ஒரு பகுதியாக, நிர்வாகப் பதிவு, அனுபவம், மீண்டும் ஒரு முறை மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சி செய்யத் தயாராக உள்ள குழுவுடன் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறோம்.
நெகிரி செம்பிலானில் எங்களது தேர்தல் பரப்புரை நேர்மறையானதாகவும், எதிர்காலத்தை நோக்கியதாகவும் இருக்கும். மாநில அரசின் சாதனைகள், மேம்பாட்டுத் திட்டங்கள், மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம். பிரிவினை அரசியலை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், சாதனைகள், கொள்கைகள் மற்றும் நெகிரி செம்பிலானின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தங்களது தேர்வை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும்.
அதேவேளை, ஜொகூர் தேர்தல் பரப்புரையையும் முடிவுகளைகளையும் மதிப்பீடு செய்வதற்காக மத்திய செயற்குழு (CEC) கூட்டம் நடத்தியது. ஜொகூர் மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கியுள்ளனர். அவர்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்.
இது ஜசெக எதிர்பார்த்த முடிவு அல்ல. எங்களது பிரதிநிதித்துவம், தற்போதைய பத்து சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து ஆறு தொகுதிகளாகக் குறைந்துள்ளது. நான்கு முக்கியமான தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவையான அளவிலும் சமநிலையிலும் ஆதரவைப் பெற முடியவில்லை. இதனைப் புரிந்துகொண்டு, அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றைச் சரிசெய்வதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
பல முனைப் போட்டிகள் நிலவிய நீண்ட காலத்திற்குப் பின்னர், எங்களது போட்டியாளர்களுக்கான ஆதரவு தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்களின் பின்னால் ஒருங்கிணைந்துள்ளது. மிகவும் சவாலான இந்தச் சூழ்நிலையிலும், ஜசெக தனது தற்போதைய பத்து தொகுதிகளில் ஆறு தொகுதிகளைத் தக்கவைத்துள்ளது.
அந்தப் பத்து தொகுதிகளில், ஜசெக வேட்பாளர்கள் 226 ஆயிரத்து 592 வாக்குகளைப் பெற்றுள்ளனர். 2022-ஆம் ஆண்டில் பெற்ற 159 ஆயிரத்து 769 வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். அதிகரித்த வாக்கு எண்ணிக்கை, நான்கு தொகுதிகளை இழந்த உண்மையை மறைக்காது. இருப்பினும், ஜசெக-க்கு இன்னும் வலுவான ஆதரவு உள்ளது என்பதையும், அதனைப் பாதுகாத்து, விரிவுபடுத்தி, வெற்றியாக மாற்ற முடியும் என்பதையும் இது காட்டுகிறது.
ஜொகூர் மக்கள், பெங்காரம், மெங்கிபோல், ஸ்கூடாய் ஆகிய தொகுதிகளில் மாற்றத்தையும், பெந்தாயான், செனாய் மற்றும் ஸ்தூலாங் ஆகிய தொகுதிகளில் அனுபவத்தையும் ஒருங்கிணைத்த ஜசெக அணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்தூலாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ஆண்ட்ரூ சென் கா எங் அவர்களை ஜசெக-இன் தலைமை கொறடாவாக மத்திய செயற்குழு நியமித்துள்ளது.
பெறப்பட்ட ஒவ்வொரு வாக்கும் ஒரு பொறுப்பாகும். இழந்த ஒவ்வொரு வாக்கும் ஒரு அறிகுறியும், ஒரு செய்தியும் ஆகும். கொள்கை, அரசியல், அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு தொடர்பான மேலதிக நடவடிக்கை தேவைப்படும் விவகாரங்களை மத்திய செயற்குழு அடையாளம் கண்டுள்ளது.
ஓர் அரசியல் கட்சி தன்னைத் தானே மதிப்பீடு செய்ய முடியாது. மக்களே அதனை மதிப்பிடுகின்றனர்.
ஜசெக மக்கள் கருத்துகளை மேலும் நெருக்கமாகக் கேட்டு, தொகுதி சேவைகளை வலுப்படுத்தி, எங்களது தொடர்பு மற்றும் நிர்வாக முறைகளை மேம்படுத்தும். ஜொகூரில் இருந்து கிடைத்த பாடங்களை பணிவுடனும், ஒழுக்கத்துடனும், மேலும் கடினமாக உழைக்கும் உறுதியுடனும் நெகிரி செம்பிலானுக்கு எடுத்துச் செல்கிறோம்.
ஜொகூர் தனது செய்தியை வழங்கியுள்ளது. அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்வோம். நெகிரி செம்பிலானில், புதிய மக்கள் ஆணையைப் பெறுவதற்காகவும், நிலையான, மிதமான, அனைவருக்கும் சேவை செய்யும் நிர்வாகத்தைத் தொடர்வதற்காகவும் நேரியல் முறையில் தொடர்ந்து போராடுவோம்.
மலேசிய ஜனநாயக செயல் கட்சி (DAP) மத்திய செயற்குழு
14 ஜூலை 2026

