


(சிவாலெனின்)
ஜூலை13: நாட்டிலுள்ள ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிகளும் தனித்துவமானது.அவை சிறந்து விளங்குகின்றன.இந்நாட்டில் தமிழ்ப்பள்ளியை நிலைக்க வைப்பதும் அதன் தடம் தொலையாமல் காப்பதும் ஒவ்வொரு மலேசிய இந்தியரின் கடமை என்றுரைத்தார் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன்.
பிறமொழி மோகத்தாலும் மாற்றான் பள்ளியில் படித்தால் எதிர்காலம் சிறந்து விளங்குமென்ற அதீத கற்பனையாலும் இந்நாட்டில் நம்மினத்தின் அடையாளமாக திகழும் தமிழ்ப்பள்ளியின் வரலாற்றையும் தொன்மையையும் தொலைத்து விடாதீர்கள் என்றும் மாநில சுகாதாரம்,மனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ சிவநேசன் நினைவுறுத்தினார்.
தமிழ்ப்பள்ளி என்பது கற்றல் கற்பித்தல் மெய்பிக்கும் இடம் மற்றும் அல்ல.நம் இனத்தின் மொழி,பண்பாடு,பாரம்பரியத்தோடு வாழ்வியல் நெறியையும் கற்பிக்கும் பொக்கிசம் என்றும் குறிப்பிட்ட அவர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் திறன் மிக்கவர்கள்.அவர்கள் அர்ப்பணிப்பும் அன்பும் அக்கறையும் கொண்டவர் என்றார்.
பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் 62வது விளையாட்டுப் போட்டியினைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன் இவ்வாறு கூறினார். மேலும், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி சிறப்பாக இயங்கி வருவதாகவும் பள்ளியின் தலைமைத்துவம்,ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கம்,வாரியக்குழு மற்றும் முன்னாள் மாணவர் கழகம் என அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமான இலக்கை நோக்கி இப்பள்ளியை உயர்த்தி வருவது போற்றுதல்குரியது என்று பெருமிதம் கொள்ள கூறினார்.
அதுமட்டுமின்றி,இப்பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் இதுவரை வெ. 1 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதில் விளையாட்டு போட்டிக்கு பின்னர் சீரமைக்கப்படவுள்ள பாலர்ப்பள்ளி மற்றும் விளையாட்டு அரேனா சீரமைப்புப் பணிகளும் அடங்கும் எனவும் டத்தோ சிவநேசன் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிகளின் கோரிக்கைகளும் தேவைகளும் சிறப்பான முறையில் ஆராயப்பட்டு அப்பள்ளிகளின் தேவைக்கு ஒப்ப மானியம் வழங்கப்பட்டு வருவதாகவும் அம்மானியம் முறையான நிலையில் பயன்படுத்தப்படுவதையும் தாம் தொடர்ந்து உறுதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பேரா மாநில அரசின் கீழ் கைத்திறன் தொழில் சார்ந்தும் ரோஃபடிக் தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு வாய்ப்புகளும் நடவடிக்கைகளும் உள்ளதாகவும் அதனை நன்முறையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி கொள்வதை தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
முன்னதாக விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பிரகாஷ் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அரணாகவும் அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் துணையாக திகழும் மாண்புமிகு டத்தோ சிவநேசன் இம்மாநிலத்திற்கு கிடைத்த பெரும் வரம் என்று புகழாரம் சூட்டினார்.
இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் வழங்கி வரும் ஆதரவும் பங்களிப்பும் நனிச் சிறந்தது.பள்ளிக்கூடம் நன்நிலைக்கு உயர டத்தோ சிவநேசன் மூலதனமாக திகழ்வதாகவும் கூறினார்.துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மட்டுமின்றி இம்மாநிலத்திலுள்ள 134 தமிழ்ப்பள்ளிக்கும் அவரது சேவையும் பங்களிப்பும் அளப்பரியது என்றார்.

