


பீடோர்,ஜூலை13: பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியின் மற்றுமொரு மைல் கல்லாக அப்பள்ளியின் தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பச் செயல்பாடுகள் திகழ்வதாகவும் மாணவர்கள் அவற்றை நிறைவாகவும் சிறப்பாகவும் கற்றுக்கொள்ளவும் பள்ளியின் ஐசிடி மையம் தனித்துவமாக அமைய மாநில சுகாதாரம்,மனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் வெ.5 ஆயிரத்து 800 மானியமாக வழங்கியிருப்பதாக அவரது சிறப்பு அதிகாரியும் தாப்பா ஊராட்சி மன்ற உறுப்பினருமான திரு.ப.ஜெயகுமார் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி,ஆசிரியர்களின் வசதிக்கும் நிறைவான நடவடிக்கைகள் மற்றும் பணிகளையும் ஆக்கப்பூர்வமாகவும் மேற்கொள்வதற்காகவும் பள்ளியின் ஆசிரியர் அறையை சீரமைத்து மேம்படுத்தவும் வெ.4 ஆயிரத்து 800ஐ மானியமாகவும் வழங்கி அப்பணிகள் நிறைவடைந்து பள்ளியின் கற்றல் கற்பித்தல் செழிமையுறும் நிலைக்கு பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை டத்தோ சிவநேசனின் பிரதிநிதியாக கலந்து தொடக்கி வைத்து உரையாற்றுகையில் ஜெயகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும்,பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் மட்டுமின்றி இப்பள்ளியின் கல்வி,புறப்பாடம், விளையாட்டு உட்பட அனைத்து செயல்பாடுகளையும் மாண்புமிகு டத்தோ சிவநேசன் கவனித்து வருவதாகவும் சிறப்பாக இயங்கும் பள்ளிகளுக்கு டத்தோ சிவநேசனின் பங்களிப்பும் ஆதரவும் நிறைவாகவே அமைந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
பேரா மாநிலத்தில் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் தனித்துவ அடையாளத்துடனும் சிறப்பான இலக்கை நோக்கியும் பயணிப்பதற்கு டத்தோ சிவநேசனின் பங்களிப்பும் தமிழ்ப்பள்ளிகள் மீது அவர் கொண்டிருக்கும் பற்றும் அக்கறையும் தான் பெரும் காரணம் என்றும் கூறிய ஜெயகுமார் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியும் மேம்பாடும் இம்மாநிலத்தில் டத்தோ சிவநேசனால் மிளிர்ந்தும் உயர்ந்தும் நிற்பதாகவும் நினைவுறுத்தினார்.
அதே வேளையில்,கல்வியைப் போல் விளையாட்டிலும் இப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்.அறிவியல் தொழில்நுட்பத்திலும் ஆக்கப்பூர்வமான இலக்கை நோக்கி பயணிக்க வேன்டும்.தொழில்திறன் கல்வி சார்ந்து மாணவர்கள் தங்களின் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.அதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் டத்தோ சிவநேசனின் கருத்தை ஜெயகுமார் தனதுரையில் வெளிப்படுத்தினார்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இப்பள்ளியின் விளையாட்டு போட்டிக்கு ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பெற்றோர்கள்,முன்னாள் மாணவர்கள்,ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்த பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சத்தியப் பிரியா பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியும் மேம்பாடும் நிச்சயம் டத்தோ சிவநேசனின் புகழ்பாடும் என்றார்.
இப்பள்ளியின் ஒவ்வொரு தேவையும் எதிர்பார்ப்பும் டத்தோ சிவநேசனால் நிறைவாக நிறைவு செய்யப்பட்டு வருவதாகவும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் அவரது பங்களிப்பும் அர்ப்பணிப்பும் காலத்தையும் வென்று நிற்கும் எனவும் பள்ளியின் தலைமையாசிரியர் தந்துரையில் குறிப்பிட்டார்.
இப்பள்ளியின் விளையாட்டுப் போட்டியினை மலேசியத் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவரும் சிலிம் ரீவர் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான திரு.பழனி சுப்பையா நிறைவு செய்து வைத்தார்.அவரோடு வட்டார தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் நிறைவாக கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

