
கிள்ளான்:
நாட்டின் முக்கிய துறைமுகங்களில் அமலாக்கத்தையும் வரி வசூலையும் வலுப்படுத்துவதற்காக எம்ஏசிசியும் மலேசிய சுங்கத் துறையும் சிறப்புப் பணிக் குழுவை முன்மொழிந்துள்ளது.
இக்குழு வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்யவும், அரசாங்க வருவாயைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட ஒரு சரியான நேரத்திலான நடவடிக்கையாகும்.
சுங்க அமலாக்கத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், துறைமுகச் செயல்பாடுகளில் அதிகப் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது.
மேலும் முறையான வழிகளில் நாங்கள் எழுப்பிய கவலைகள் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தீவிர கவனத்தைப் பெற்று வருவதை நான் பாராட்டுகிறேன் என்று மேரைடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ ஜெயந்திரன் கூறினார்.
இந்தப் பணிக்குழுவின் உருவாக்கம் ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும்.
இதன் பணிகள், தெளிவான நடைமுறைகள், வலுவான அமலாக்கம் மற்றும் இந்தத் துறையில் உள்ள அனைத்து சட்டப்பூர்வமான நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
முன்னதாக நேற்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், சுங்க அமலாக்கத்தை வலுப்படுத்துவது, கசிவுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து இரு முகமைகளுக்கும் இடையே நடந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து,
நாடு தழுவிய முக்கிய துறைமுகங்களில் அமலாக்கம் மற்றும் வரி வசூலைக் கண்காணிக்க ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைக்க ஊழல் தடுப்பு முகமையும் முன்மொழிவதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

