சுவா தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை – அமினுடின் ஹரூன் விளக்கம்

லிங்கி, ஜூலை 20:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் சுவா (Chuah) சட்டமன்ற தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் தேர்வைச் தொடர்ந்து கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல்களை நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன் மறுத்துள்ளார்.

சுவா தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போர்ட் டிக்சன் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ கென்னி சியூ சீ கின், தற்போதைய வேட்பாளர் டத்தோ யூ பூன் லை-யை முழுமையாக ஆதரித்து மாநிலத் தேர்தல் பிரசாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சுவாவில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால் அந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்டது.

போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கும் கென்னி சியூ தனது முழு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார் என
இன்று (ஜூலை 20) லிங்கியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலை முன்னிட்டு, கட்சிப் பணிகள் சிறப்பாக நடைபெற கென்னி சியூ தொடர்ந்து உழைத்து வருவதாகவும் அமினுடின் தெரிவித்தார்.

கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் வேட்பாளர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

சுவா மற்றும் போர்ட் டிக்சனில் பிளவு இருப்பதாக கூறப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்.

மேலும், அனைத்து தரப்பினரும் தேர்தல் பிரசாரத்தை ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் கென்னி சியூ மற்றும் டத்தோ யூ பூன் லையே எதிரெதிராக சித்தரிக்கும் படங்கள் பரவியதைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய கென்னி சியூ, தமக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆதரவாளர்கள் அமைதியாக இருந்து பக்காத்தான் ஹராப்பானின் வெற்றிக்காக பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

தாம் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படாததற்குக் காரணம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிர்வாகப் பதிவில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடே என்றும், இது குற்றவியல், ஊழல் அல்லது நேர்மை தொடர்பான விவகாரம் அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.

என் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பதிவுகளை புதுப்பிப்பதற்காக எனது சட்டக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும்.

இதனிடையே, டத்தோ யூ பூன் லை, கென்னி சியூ தொடர்ந்து தமக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

அவர் எனது கட்சித் தோழர் மட்டுமல்ல, எங்கள் பொதுவான இலக்கிற்காக இணைந்து செயல்படும் சக போராளியும் ஆவார்.

நிலையான, தூய்மையான ஆட்சியைத் தொடர்ந்து வழங்கி, போர்ட் டிக்சனின் வளர்ச்சியை முன்னெடுப்பதே எங்கள் நோக்கம்.

கென்னி சியூ தொடங்கிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதை சுவா மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என அவர் சொன்னார்.

சுவா தொகுதியில் டத்தோ யூ பூன் லை, பாரிசான் நேஷனல் வேட்பாளர் பாவ் ஜியோ சிங்கை நேருக்கு நேர் எதிர்கொள்கிறார். கடந்த 2023 மாநிலத் தேர்தலில் யூ பூன் லை, 6,298 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles