
தம்பின் , ஜூலை 21-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தம்பின், ரெப்பாவில் 25 லட்சம் வெள்ளியில் புதிய நவீன மின் சுடலை கட்டும் பணி தொடங்கி விட்டதாக ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீரப்பன் தெரிவித்தார்.
தம்பின் வட்டாரத்தில் நவீன மின் சுடலை மையம் அமைப்பதற்கான நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அண்மையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளாக தம்பின் வட்டாரத்தில் புதிய மின் சுடலை வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
கோவிட் காலத்தில் அதிகமானோர் இறந்தபோது, அவர்களைத் தகனம் செய்வதற்கு போதிய மின் சுடலை வசதிகள் இல்லை.
சிரம்பான் செல்ல வேண்டும், இல்லையேல் மலாக்கா செல்ல வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்தது.
இதை கருத்தில் கொண்டு தம்பினில் ஒரு மின்சுடலை மையம் கண்டிப்பாக நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ரெப்பா சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் வீரப்பன் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசு சார்பில் எட்டு மாநிலங்களில் புதிய மின் சுடலை திட்டங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் ஒரு மின் சுடலை ரெப்பாவில் அடங்கும்.
இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
15 வருட போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

