சுங்கை பக்காப் பள்ளித் திட்டம் மீண்டும் தொடர்கிறது! இந்திய சமுதாயக் கல்வியை மடானி அரசு புறக்கணிக்கவில்லை என்பதற்கான உறுதியான சான்று

கோலாலம்பூர் ஜூலை 25-
ஓரு தசாப்தத்திற்கும் மேலாக காத்திருந்த சுங்கை பக்காப் தமிழ் பள்ளி இறுதியாக நனவாகப் போகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். மங்கிவிட்ட நம்பிக்கை இன்று மீண்டும் ஒளிரத் தொடங்கியுள்ளது.

இனம், மதம், பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மலேசியக் குழந்தைக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமையாகும்.

தமிழ்ப்பள்ளிகள் (எஸ்.ஜே.கே.(தி)) உட்பட அனைத்து மாணவர்களும் பாதுகாப்பான, தரமான மற்றும் சிறந்த கற்றல் சூழலைப் பெறுவதை உறுதிசெய்வதில் மதானி அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

மதானி அரசால் RM12.67 மில்லியன் உச்ச செலவுத் தொகை ஒதுக்கப்பட்டதும், யயாசான் டிடிக் நெகாரா (Yayasan Didik Negara) இத்திட்டத்தின் செயலாக்க நிறுவனமாக நியமிக்கப்பட்டதும், நீண்டகாலமாக தாமதமடைந்த கல்வித் திட்டங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூகத்தின் நலனுக்காக நிறைவேற்ற அரசாங்கம் கொண்டுள்ள தீவிர அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

நாடாளுமன்ற மேலவையில் கல்வி அமைச்சர் மாண்புமிகு ஃபத்லினா சிடெக் வழங்கிய விளக்கத்தின்படி, 2015ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த செயலாக்கச் சிக்கல்கள், நிதி பற்றாக்குறை மற்றும் சட்டத் தகராறுகளே இந்தத் திட்டம் தாமதமடைய முக்கியக் காரணங்களாக அமைந்தன.

பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும், திட்டத்தை கைவிடாமல் அதற்கான தீர்வுகளை கண்டறிந்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் உறுதியுடன் செயல்பட்டது.

குறிப்பாக குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளின் இடமாற்றம் தொடர்பான வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்ய கல்வி அமைச்சு முன்வந்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

கல்வித் தேவைகள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் கருத்துக்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பரிந்துரையும் நியாயமாக மதிப்பீடு செய்யப்படும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி, பாதுகாப்பான வசதிகள் மற்றும் சிறந்த கற்றல் சூழல் கிடைப்பதை உறுதிசெய்வதே நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.

மதானி அரசின் இந்திய சமுதாயக் கல்விக்கான அர்ப்பணிப்பு வெறும் வாக்குறுதியாக இல்லாமல், செயல்பாடுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தாமதமான சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளித் திட்டம் மீண்டும் தொடங்கப்படுவது, நாட்டின் கல்வி வளர்ச்சியில் எந்த சமூகமும் புறக்கணிக்கப்படவில்லை என்பதற்கான தெளிவான சான்றாகும்.

தியாகராஜ் சங்கர நாராயணன்
அமைச்சரின் சிறப்பு அதிகாரி
மலேசிய கல்வி அமைச்சு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles