
கோலாலம்பூர், ஆக 14-
பேராக், செமோர், குணுங் காந்தான் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட சாக்கியமுனி குகை மடத்தை (Sakyamuni Caves Monastery) இடிப்பு மற்றும் வெளியேற்றும் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் தலையிட வேண்டும் என மலேசிய இந்துக் கோயில்கள் மன்றமும் இந்து சமய அமைப்புகளின் சங்கமும் (Mahima) வலியுறுத்தியுள்ளது.
அதன் தலைவர் டத்தோ’ கண்ணா சிவகுமார், இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோ’ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட வேண்டும் என மடத்தின் நிர்வாகம், துறவிகள் மற்றும் தொடர்புடைய குழுக்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு தாங்கள் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் உள்ளார்.
குணுங் காந்தான் பகுதி தம்புன் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்குகிறது.
சாக்கியமுனி குகை மடம், அப்பகுதியில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வரும் சிமெண்டு குவாரி நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, இடிப்பு மற்றும் வெளியேற்றும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.
இந்த மடத்தையும் குணுங் காந்தான் சுற்றியுள்ள பகுதிகளையும் தேசிய பாரம்பரியத் தளமாக (Tapak Warisan Negara) அறிவிப்பதற்கான கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என டத்தோ சிவகுமார் கூறினார்
. இதன் மூலம் இந்த முக்கியமான பாரம்பரியம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என்றார்.
“இந்த வழிபாட்டுத் தலம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இத்தகைய இடங்கள் அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும்.
“வழிபாட்டுத் தலத்தையும் குணுங் காந்தான் பகுதியையும் பாதுகாக்கும் வகையில் தீர்வு காண, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மகிமா கேட்டுக்கொள்கிறது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
டத்தோ சிவகுமாரின் கூற்றுப்படி, குணுங் காந்தானின் முக்கியத்துவம் அங்குள்ள மடத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. அந்தப் பகுதி கிந்தா பள்ளத்தாக்கு தேசிய புவிப் பூங்காவில் (Kinta Valley National Geopark) எஞ்சியுள்ள 12 சுண்ணாம்புக் குன்றுகளில் ஒன்றாகவும் உள்ளது.
மேலும், இப்பகுதி அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு தாவர மற்றும் விலங்கு இனங்களுக்கு வாழ்விடமாகவும் விளங்குகிறது. எனவே, குணுங் காந்தானைப் பாதுகாப்பது பாரம்பரிய மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் முக்கியமானது என அவர் தெரிவித்தார்.
குவாரி நடவடிக்கைகள் காரணமாக மடத்தின் நிலை தொடர்பான சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
2023 செப்டம்பர் மாதம், ஒரு சிமெண்டு உற்பத்தி நிறுவனம் அந்த நிலத்திலிருந்து மடத்தை வெளியேற்றுவதற்கான வழக்கில் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகின. எனினும், குணுங் காந்தானின் கலாசார மதிப்பையும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதுகாக்க வேண்டும் என பாரம்பரிய மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
குணுங் காந்தான் பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களின் தாக்கத்தை அரசாங்கம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொருளாதார நலன்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாப்பதைவிட மேலோங்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இந்தப் பகுதியை தேசிய பாரம்பரியத் தளமாக அறிவிப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டியாக இருப்பதுடன், இத்தகைய சூழலில் நீண்ட காலமாக இருந்து வரும் வழிபாட்டுத் தலத்திற்கும் பாதுகாப்பை வழங்கும்.
“அரசாங்கம் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தீர்வைக் கண்டறிய வேண்டும். அதே நேரத்தில், எதிர்கால தலைமுறைகளுக்காக இந்தப் பகுதி பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்,”
என்று அவர் வலியுறுத்தினார்.

