
ரவாங், ஆக 15-
ரவாங் தமிழ்ப்பள்ளியில் புதிய கட்டடம் அமைப்பதற்காக பள்ளியின் விளையாட்டுத் திடலை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் விளையாட்டு திடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு உறுதியளித்துள்ளார்.
ரவாங் தமிழ்ப்பள்ளியில் சுமார் வெ.1.5 மில்லியன் செலவில் ஆறு வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பள்ளியின் தற்போதைய விளையாட்டுத் திடலின் ஒரு பகுதியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இணையாக அவர்களின் விளையாட்டு மற்றும் உடற்கல்வி நடவடிக்கைகளுக்கும் பள்ளி திடல் அவசியம் என்பதால், திடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாப்பா ராயுடு, வரும் திங்கட்கிழமை இது தொடர்பான பரிந்துரையை முன்வைக்கவுள்ளதாகவும், கல்வி அமைச்சு மற்றும் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கு கடிதம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பள்ளியின் தற்போதைய பழைய கட்டடத்தை இடித்து, அதே இடத்தில் புதிய கட்டடத்தை அமைக்கும் திட்டத்தை தாம் வரவேற்பதாக குறிப்பிட்ட அவர், புதிய கட்டடம் அமைப்பதற்காக மாணவர்களின் விளையாட்டுத் திடலை இழக்கும் நிலை ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
“பழைய கட்டடத்தை இடித்து, அந்த இடத்திலேயே புதிய கட்டடத்தை கட்டுவதை நான் வரவேற்கிறேன். ஆனால் பள்ளியின் விளையாட்டுத் திடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது. பெற்றோர்களின் பக்கம் நான் நின்று இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்,” என்று அவர் உறுதியளித்தார்.
புதிய கட்டடம் கட்டப்படுவது மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கான நல்ல நடவடிக்கையாக இருந்தாலும், அதற்காக மாணவர்களுக்கு ஏற்கனவே உள்ள விளையாட்டு வசதியை இழக்கச் செய்வது சரியான தீர்வாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ரவாங் தமிழ்ப்பள்ளியின் தேவைகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக தெரிவித்த பாப்பா ராயுடு, கடந்த ஆண்டு பள்ளிக்கு வெ.80,000 மானியம் வழங்கப்பட்டதாகவும், இம்முறையும் அதே தொகையான வெ.80,000 வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த மானியத்தை மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துமாறு பள்ளி நிர்வாகத்தையும் அவர் கேட்டுக்கொண்டார்.
ரவாங் தமிழ்ப்பள்ளியின் கட்டடத் தேவையும் மாணவர்களின் விளையாட்டு வசதிகளும் இரண்டும் முக்கியமானவை என்பதால், இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுத் தீர்வை கண்டறிவதே தமது நோக்கம் என்றும் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடி, மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

