
கோலாலம்பூர் ஆக 20-
கார்ப்பரேட் மாஃபியா” நடவடிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து காவல்துறைத் தலைவர் (KPN) மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை ஆணையர் இனியும் தாமதிக்காமல் தெளிவான, முழுமையான மற்றும் வெளிப்படையான விளக்கத்தை வழங்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இந்த விவகாரம் குறித்து நான் பலமுறை கேள்வி எழுப்பியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியிருந்தாலும், இன்றுவரை விசாரணை எதிர்பார்க்கப்பட்ட வேகத்தில் நடைபெறவில்லை. நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விசாரணை இவ்வாறு மந்தமாக நகர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே அமைச்சரவை இவ்விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்குப் பின்னர் கூட, காலம் கடந்துவிட்டது. ஆனால், எதிர்ப்பார்த்த வேகத்தில் நகரவில்லை. காவல்துறையும் SPRM-மும் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆராய்ந்து, தேவையான நபர்களை விசாரித்து, ஆதாரங்களைத் திரட்டி, விசாரணையை முன்னெடுத்திருக்க வேண்டும்.
அமைச்சரவை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த பின்னரும், இந்த விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது என்பதை மக்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க முடியாத நிலை இருக்கக் கூடாது. ஏனென்றால், இது சாதாரணமான ஒரு புகார் அல்ல. இது மிகப்பெரிய பொதுநலன் சார்ந்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரம். இக்குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
மேலும், நாட்டின் நிறுவனங்கள் மீதான நம்பிக்கை, சட்ட அமலாக்க அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் மலேசிய சந்தை நம்பிக்கை ஆகியவற்றையும் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது.
அதனால், இனியும் தமத்துக்கு இடமில்லை. உறுதியான நடவடிக்கையும் தெளிவான பதிலும் இப்போது அவசியம். இந்த விவகாரத்தின் பின்னணியில் சில நபர்கள் முக்கிய பங்காற்றியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே:
• இதுவரை என்ன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
• யாரெல்லாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்?
• என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
• விசாரணை தற்போது எந்த கட்டத்தில் உள்ளது?
• அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
• விசாரணை எப்போது முடிவுக்கு கொண்டுவரப்படும்?
என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் அறிவிக்க வேண்டும்.
குறிப்பாக, விசாரணைக்கு உதவக்கூடிய முக்கிய நபர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படும் விக்டர் சின் (Victor Chin) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாரா? அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதா? இல்லையெனில், அதற்கான காரணம் என்ன? என்பதற்கான கேள்விகளுக்கும் KPN மற்றும் SPRM தலைமை ஆணையர் நேரடியான பதிலை வழங்க வேண்டும்.
மலேசிய மக்களுக்கு இந்த விவகாரத்தின் உண்மையான நிலையை அறிந்துகொள்ள முழு உரிமை உள்ளது. ஒரு விவகாரம் தேசிய நலன், பொது நம்பிக்கை மற்றும் நாட்டின் நிறுவனங்களின் நம்பகத்தன்மையைத் தொடும்போது, மௌனமும் நீண்டகால தாமதமும் பதிலாக இருக்கக் கூடாது.
குற்றச்சாட்டுகள் உண்மையெனில், பொறுப்பேற்க வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனில், அதுவும் தெளிவாக நிரூபிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் எந்த முடிவும் இல்லாமல் விசாரணையை முடிவில்லாமல் இழுத்தடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, காவல்துறைத் தலைவரும் SPRM தலைமை ஆணையரும் இனியும் காலதாமதம் செய்யாமல், விசாரணையின் தற்போதைய நிலை, இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் விசாரணையை நிறைவு செய்வதற்கான காலக்கெடு ஆகியவற்றை உடனடியாக பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மக்கள் மௌனத்தை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்கள்.
கோபிந்த் சிங் டியோ
தேசியத் தலைவர்
ஜனநாயக செயல் கட்சி (DAP)
இலக்கவியல் அமைச்சர்

