



சித்தியவான் மை டீம் இந்திய அணி
டி.ஐ.ஏ தலைவர் சுழற்கிண்ணத்தை கைப்பற்றியது
சித்தியவான், ஆக. 27—
கடைசி நிமிடங்கள் வரை நீடித்த பரபரப்பான ஆட்டித்திற்கு மத்தியில், இசட் இசட் இ மஞ்சோங் அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சித்தியவான் மை டீம் இந்திய அணி, மஞ்சோங் வெட்டரன் லீக் 2026 ஆம் ஆண்டிற்கான டி.ஐ.ஏ தலைவர் சுழற்கிண்ணத்தை கைப்பற்றியது.
சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் இப்போட்டியில் பேராக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 வெட்டரன் அணிகள் மிகுந்த உற்சாகத்துடன் களம் இறங்கினர்.
காலிறுதிக்குப் பின்னர் அரையிறுதிக்கு முன்னேறிய சித்தியவான் மை டீம் அணி, லெஜண்ட் ஃபைட்டர் எஃப்.சி அணியை பெனால்டி முறையில் 5–4 என்ற கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் இசட் இசட் இ மஞ்சோங் அணி, ரின்திஸ் வெட்டரன் எஃப்.சி அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இறுதியில் சித்தியவான் மை டீம் அணியின் 1–0 வெற்றி, அதற்கு சாம்பியன் பட்டத்தையும் சுழற்கிண்ணத்தையும் பெற்றுத்தந்தது.
சாம்பியனான சித்தியவான் மை டீம் இந்திய அணிக்கு டி.ஐ.ஏ தலைவர் சுழற்கிண்ணம், வெற்றிக்கோப்பை, பதக்கங்கள் மற்றும் 2,500 ரிங்கிட் பரிசுத்தொகை ஆகியன வழங்கப்பட்டது.
இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற இசட் இசட் இ மஞ்சோங் அணிக்கு 1,500 ரிங்கிட் பரிசுத் தொகை, கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய மஞ்சோங் மாவட்ட ஆட்சியாளர் தோ’ஸ்ரீ பிஜயல். கோல் டத்தோ’ ஷஹாருடின் ஹாஜி நஸாரி, வயது விளையாட்டு ஆர்வத்திற்கு தடையல்ல என்பதை வெட்டரன் வீரர்கள் நிரூபித்துள்ளதாகப் பாராட்டினார்.
மேலும் விளையாட்டு உடல்நலத்தையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்கும் சிறந்த தளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் திறப்புரை நிகழ்த்திய சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத் தலைவர் மகாலிங்கம் கோவிந்தசாமி, வெட்டரன் வீரர்களுக்கு மீண்டும் களம் காணும் வாய்ப்பை உருவாக்குவதும் நட்புறவை வலுப்படுத்துவதுமே இப்போட்டியின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

