



பெஸ்தாரி ஜெயா, ஆக. 27-
மஞ்சோங் மாவட்ட கம்போங் காயான் தமிழ்ப்பள்ளியும் கரிஸ்மா முத்தியாரா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய அளவிலான ரோபோட்டிக், செயற்கை நுண்ணறிவுப் போட்டி, மாணவர்களின் அறிவியல் அறிவு, தொழில்நுட்பத் திறன், படைப்பாற்றல் மற்றும் புதுமைச் சிந்தனைகளை வெளிப்படுத்திய சிறந்த தளமாக அமைந்தது.
மலேசியாவின் 15 மாநிலங்களைச் சேர்ந்த பல்லின மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இணையவழி முதல்கட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில், யுனிசெல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேரடிப் போட்டியில் 1,000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என மூன்று பிரிவுகளில் மொத்தம் 256 அணிகள் போட்டியிட்டன. இதில் 187 ஆரம்பப்பள்ளி அணிகள், 47 இடைநிலைப்பள்ளி அணிகள் மற்றும் 22 கல்லூரி அணிகள் இடம்பெற்றன.
நிறைவு விழாவில் உரையாற்றிய மஞ்சோங் மாவட்டக் கல்வி இலாகா அதிகாரி துவான் ஹாஜி மூசா பின் ஹமிட், ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் மாணவர்களின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இத்துறைகள் தர்க்கச் சிந்தனை, சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன், தன்னம்பிக்கை மற்றும் குழு ஒருங்கிணைப்பை வளர்க்கும் என அவர் தெரிவித்தார்.
கம்போங் காயான் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயந்திமாலா ராமசாமி, சிறு வயதிலேயே இத்துறைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது அவர்களின் சிந்தனைத் திறனையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தும் என்றார்.
கரிஸ்மா முத்தியாரா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான விக்னேஷ் முத்துகிருஷ்ணா, தேசிய அளவிலான போட்டி அனுபவம் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் வெற்றி, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளும் பண்பையும் உருவாக்குகிறது என குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஆறுமுகம் வேலு, யுனிசெல் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ரொஸிலா பிந்தி அலியாஸ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

