30 நிமிடங்கள் 10 ஆலயப் பிரச்னைக்குத் தீர்வு – டத்தோ சிவநேசனின் ஆக்கப்பூர்வப் பணி!!

ஈப்போ,ஆக28: பத்துகாஜா மற்றும் புந்தோங் வட்டாரத்திலுள்ள 10 ஆலயங்களின் பிரச்னைகளுக்கு மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் 30 நிமிடங்களில் தீர்வை ஏற்படுத்தினார்.

நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் பத்துகாஜா வட்டாரத்தைச் சார்ந்த 5 ஆலயங்கள் மற்றும் புந்தோங் வட்டாரத்திலுள்ள 5 ஆலயங்களின் நிலப்பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுதுறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இச்சந்திப்பின் போது பேரா மாநில நில இலாகாவின் இயக்குநர் டத்தோ ஹாஜி முகமட் பாரீஷ் பின் முகமட் ஹனிப் மாநில நில இலாகாவின் துணை இயக்குநர்,காவல்துறை துணை ஆணையர்,ஈப்போ மாநகர மன்ற அதிகாரிகள்,பேரா Turf Club அதிகாரி உட்பட பேரா மாநில இந்து சங்கத்தலைவர் திரு.பொன்.சந்திரன் மற்றும் மாநில இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் திரு.சு.கிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்துகாஜா பகுதியிலுள்ள 5 ஆலயங்களுக்கு பூசிங் பகுதியில் ஆற்றங்கரை வசதியோடு சுமார் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் புந்தோங் வட்டார ஆலயங்களுக்கும் மிகவும் சிறப்பான மற்றும் வருங்காலத்தில் நகரின் மையமாக் உருமாறவிருக்கும் ஈப்போ செண்டரல் பகுதியை சார்ந்து அந்நிலம் அமைந்திருப்பதாகவும் டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,இந்தப் பத்து ஆலயங்களைத் தவிர்த்து ஈப்போ Turf Clubஇல் அமைந்திருக்கும் ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயம் தொடர்பில் நிலவி வந்த புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டது என்றும் விவரித்த சிவநேசன் சம்மதப்பட்ட ஆலயத்திற்கு Turf Club பணியாளர்கள் மட்டுமே வழிபாடு செய்தல்,அதிகமான சத்தத்தை தவிர்த்தல் உட்பட வெளியாள் வருகை இனி இருக்காது போன்ற ஒப்பந்தங்களுக்கு இணக்கம் காணப்பட்டு அச்சிக்கலும் தீர்வைக் கண்டதாக அவர் மேலும் கூறினார்.

நிலவி வரும் இந்த ஆலய நிலப்பிரச்னைகள் எல்லாம் நேற்று இன்று தொடங்கியதில்லை.இவை அனைத்தும் 50-60ஆண்டுகளாக நீடிக்கும் சிக்கல்கள்.பேரா மாநிலத்தில் தொடர்ந்து ஆலய நில விவகாரங்களில் ஆக்கப்பூர்வமாக தீர்வுகளை ஏற்படுத்தி வரும் டத்தோ சிவநேசன் சம்மதப்பட்ட 10 ஆலயங்களோடு பேரா Turf Club ஸ்ரீ முனிஸ்வரர் ஆலய விவகாரத்திற்கும் முற்று புள்ளி வைத்தார்.

முன்னதாக மாற்று நிலத்திற்கு இடம் மாற்றம் மேற்கொள்ள புந்தோங் வட்டாரத்திலுள்ள காளியம்மன் ஆலயத்தோடு மேலும் நான்கு ஆலயங்கள் கொள்கையளவில் ஒப்புக்கொண்ட நிலையில் பத்துகாஜாவிலுள்ள 5 ஆலயங்களில் நான்கு ஒப்புக்கொண்ட சூழலில் ஒரு ஆலய நிர்வாகம் 1 ஏக்கர் நிலம் தனியாக வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதாகவும் சிவநேசன் சுட்டிக்காண்பித்தார்.

அரசாங்கம் வழங்கும் நிலத்தில் இடமாற்றம் காண்பதுதான் ஆகச் சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்றும் ஆலோசனை வழங்கிய சிவநேசன் சம்மதப்பட்ட ஆலயம் தற்போது அமைந்திருக்கும் நிலம் அரசாங்கத்தின் நிலம் என்றும் இங்கேயேதான் இருப்போம் என அடம்பிடிப்பதும் அரசாங்கத்தை மிரட்ட முயல்வதும் சிந்தனைக்கு ஒவ்வாதது என்றார்.

மற்ற மாநிலங்கள் போல் அல்லாமல்,பேராவில் அனைத்து ஆலயங்களும் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் ஒவ்வொரு ஆலய நிர்வாகமும் ஏற்று கொண்டால் எதிர்காலத்தில் இம்மாநிலத்தில் எந்தவொரு ஆலயமும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்காது.அனைத்து ஆலயங்களும் அரசு அனுமதி பெற்ற ஆலயங்களாகத் திகழும் என்றார்.

சம்மதப்பட்ட 10 ஆலயங்களுக்கான நிலம் அடையாளம் காணபட்டு அதற்கான வரைப்படம் உட்பட அடுத்தகட்ட செயல்பாடுகளை நில இலாக்கா மேற்கொண்டு வரும் நிலையில் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் அவை சமர்ப்பிக்கப்பட்டு ஆக்கப்பூர்வமான முடிவும் எடுக்கப்படும் என்றும் தொடர்ந்து ஆலயங்களின் விவகாரங்களில் உத்தரவாதம் மிக்க தீர்வை ஏற்படுத்தி வரும் டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.

அதே வேளையில்,ஆலய விவகாரங்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க மறுக்கும் ஆலய நிர்வாகங்களுக்கு தன் தரப்பிலிருந்து எத்தகைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் தாம் வழங்கப் போவதில்லை என்றும் சிவநேசன் கூறினார்.

ஆலய விவகாரங்களுக்கு தலைமையேற்றிருக்கும் தாம் ஒவ்வொரு ஆலயப் பிரச்னைகளையும் நுண்ணியமாக ஆராய்ந்து ஆலயத்திற்கும் இந்து சமூகத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

அவ்வகையில்,ஆலயங்களின் பாதுகாப்பு,நிலைத்தன்மை,எதிர்கால உத்தரவாதம் என அனைத்தையும் உறுதி செய்தும் வருகிறேன்.எனவே,தாம் மேற்கொள்ளும் இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டியது ஒவ்வொரு ஆலய நிர்வாகங்களின் கடமையென்றும் அவர் மேலும் கூறினார்.

மாநில ஆட்சிக்குழுவில் தாம் இருக்கும் வரை பேரா மாநிலத்தின் அனைத்து ஆலயங்களின் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் உறுதி செய்யப்படும் என மீண்டும் நினைவுறுத்திய டத்தோ சிவநேசன் ஆலய நிர்வாகங்களும் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து அரசு மேற்கொள்ளும் நற்செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles