சிலம்ப விளையாட்டின் வளர்ச்சி ; நிதி ஒதுக்கீட்டுக்கான முயற்சிகள் எடுக்கப்படும் – பாப்பாராய்டு

பந்திங் , ஆக 29-
சிலம்ப விளையாட்டின் வளர்ச்சியை உறுதிச் செய்ய, அதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென மனிதவள, வறுமை ஒழிப்புக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

சிலம்பம், பதக்கங்களை வெல்வதற்கான விளையாட்டு மட்டுமல்ல, இளைஞர்களிடையே ஒழுக்கம், மன உறுதி மற்றும் தனித்துவமான ஆளுமையை உருவாக்கும் தற்காப்புக் கலையாக விளங்குகிறது.

அதே வேளை, அண்மையில், 2026 சுக்மா போட்டியில் சிலம்ப வீரர்கள் பெற்ற வெற்றி, இந்த பாரம்பரிய தற்காப்புக் கலையை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றாரவர்.

“கோலாலங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள், இம்முறை சுக்மா போட்டியில் தங்கப் பதக்கங்கள் உட்பட சிறப்பான சாதனைகளைப் படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

“சிலம்பம் ஒரு விளையாட்டு மட்டுமல்ல. இது இந்திய சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் தற்காப்புக் கலையாகும். அதேவேளையில், இளைஞர்களிடையே ஒழுக்கம், மன உறுதி மற்றும் ஆளுமையை உருவாக்கும் சக்தியையும் கொண்டுள்ளது,” என்றார் அவர்.

சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேசத்தைப் பிரதிநிதித்து 2026 சுக்மா போட்டியில் சிறப்பான சாதனை படைத்த கோலாலங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது சிலம்ப வீரர்களையும் நிர்வாகக் குழுவினரையும் பாராட்டும் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சஸ்மிதா ரவி, தனிநபர் குத்து வரிசை மற்றும் கலப்பு ஆயுதமற்ற இசை வடிவப் பிரிவில் இரு தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஷார்வின் ராஜ் செல்வம், கலப்பு ஆயுதமற்ற இசை வடிவப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

அதேவேளை, கிரண் ஜெனிபர் டான்சில், கலப்பு ஆயுத இசை வடிவப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், தனித்திறமை கம்பு பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றார்.

சுக்மா போட்டிக்காக, சிலம்ப வீரர்களை ஓராண்டுக்கும் மேலான தீவிரப் பயிற்சிக்கு உட்படுத்தியதாகவும், அதன் பலனாகவே நல்ல அடைவுநிலையை எட்ட முடிந்ததாகவும், சிலம்ப பயிற்சியாளர் சந்திரன் பரமசிவம் தெரிவித்தார்.

“வீரர்கள் போட்டிக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள இரவு பகலாக தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டனர். அவர்களின் கடின உழைப்பும் தியாகமும் இறுதியில் தங்கப் பதக்க வெற்றியாக அமைந்தது,” என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles