அடுத்த தலைமுறையிடம் பாரம்பரியக் கலையை உயிரோட்டத்துடன் கொண்டு சேர்க்க வேண்டும்! ஸ்ரீமதி கிளாரா ஃபிரான்சிஸ் வலியுறுத்தல்

சித்தியவான், செப். 1 –

நவீன உலகின் வேகமான மாற்றங்களுக்கு மத்தியில் படிப்படியாக

வரும் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாப்பது அவசியம் என்றும், தமிழரின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் ஆன்மிக அடையாளத்தைத் தாங்கி நிற்கும் பரதக்கலையை அழியாமல் காத்து, அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமையும் பொறுப்புமாகும் என ஸ்ரீ சொர்னா ஃபைன் ஆர்ட்ஸ் நடன வகுப்பு ஆசிரியரும், ஆடலரசி நாட்டிய தாரகையுமான ஸ்ரீமதி கிளாரா ஃபிரான்சிஸ் வலியுறுத்தினார்.

சித்தியவான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மண்டபத்தில், “முருகா முத்தம் தா” என்ற கருப்பொருளில் நடைபெற்ற ஸ்ரீ சொர்னா ஃபைன் ஆர்ட்ஸ் நடன வகுப்பின் மாபெரும் சலங்கை பூஜை விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பரதநாட்டியம் என்பது வெறுமனே மேடையில் ஆடப்படும் நடனம் அல்ல என்றும், அது தமிழரின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் ஆன்மிக உணர்வுகளைத் தலைமுறைகள் தாண்டி எடுத்துச் செல்லும் உன்னதக் கலை வடிவம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரதக்கலையை வெறும் கலை வடிவமாக மட்டும் அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லாமல், அதன் பின்னணியில் உள்ள பண்பாடு, ஒழுக்கம் மற்றும் ஆன்மிக உணர்வுகளையும் உயிரோட்டத்துடன் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, இளம் தலைமுறையினர் பாரம்பரியக் கலைகளில் ஆர்வம் கொள்ளும் வகையில் வாய்ப்புகளையும் ஊக்கத்தையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பரதநாட்டியம் கலைத்திறனை மட்டுமல்லாது, ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஆளுமைத்திறன் போன்ற நல்ல பண்புகளையும் வளர்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சித்தியவான் வட்டாரத்தில் பரதநாட்டிய வகுப்புகளை நடத்தி வரும் ஸ்ரீமதி கிளாரா ஃபிரான்சிஸ், ஏராளமான மாணவிகளுக்கு பயிற்சி அளித்து, பல சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி பரதக்கலையின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீ சொர்னா ஃபைன் ஆர்ட்ஸ் நடன வகுப்பில் பரதம் பயின்று வந்த ஷர்மீத்ரா இளங்கோ, ஹர்சித்ரா கோபால கிருஷ்ணன், வரலக்ஷ்மி சுந்தரேசன், ஹரினி காளியப்பன், ஹர்ஷினி காளியப்பன், ஆண்ட்ரியா வில்லியம் அல்ஃபோன்சோ, கயல்விழி ஆனந்தன் மற்றும் பவிஷா நித்தியானந்தம் ஆகியோரின் சலங்கை பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பரதத்தின் அழகிய அசைவுகள், சலங்கையின் இனிய ஓசை மற்றும் மாணவிகளின் அர்ப்பணிப்பு ஒன்றிணைந்த இவ்விழா, பாரம்பரியக் கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியின் சிறப்பான வெளிப்பாடாக அமைந்தது.

திரளானோர் கலந்து கொண்டு இளம் நடனமணிகளின் திறமையைப் பாராட்டி வாழ்த்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles