
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர், செப் 2-
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு எதிராக அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை பாயும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா இன்று கடுமையாக எச்சரித்தார்.
கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் திருப்பணிக்காக இன்றைய தேதி வரை 50 லட்சம் வெள்ளிக்கு மேல் நிதி கிடைத்துள்ளது.
ஆனால் 78 லட்சம் வெள்ளி நிதி வசூல் என்று செயற்கை நுண்ணறிவு மூலம் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
இது முற்றிலும் சுத்த பொய் என்று அவர் சுட்டிக் காட்டினார்
48 நாள் மண்டலபிஷேகம் முடிந்த பின்னர்தான் முழு வரவு செலவு கணக்கு முழுமை பெறும் என்று அவர் சொன்னார்.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகம் முடிந்த மறுநாள் எனக்கு எதிராக அவதூறு பரப்பினார்கள்.
மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு 78 லட்சம் வெள்ளி வசூல் செய்யப்பட்டது.
அந்த பணம் எங்கே போனது மற்றும் ஊழல் நடந்துள்ளது என்று கூறி மலாய் மொழியில் அவதூறு பரப்பினார்கள்.
நல்லுள்ளம் கொண்டவர்கள் கொடுத்த நன்கொடை மூலம் கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி நடந்தது.
ஆனால் என்னையும் என் மகனையும் குறி வைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காக அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும் என்பதை எச்சரிக்க விரும்புகிறோம்.
கருங்கற்களால் கட்டப்பட்ட கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் திருப்பணிக்காக பல லட்சம் வெள்ளி செலவு செய்திருக்கிறோம்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் வரவு செலவு கணக்கு முறைப்படி அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் சமர்பித்து வருகிறோம் என்று அவர் சொன்னார்.
ஊழல் நடந்துள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து அவதூறு பரப்பி வருகின்றனர் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

