


பீடோர்,செப் 1-தேசிய ஒருமைப்பாடும் பல்லினத்தின் ஒற்றுமையும் மலேசியர்களின் தனித்துவ அடையாளம் என பெருமிதம் கொண்டார் டத்தோ அ.சிவநேசன்.
மலேசியர்களிடையே மேலோங்கியிருக்கும் மதநல்லிணக்கம்,புரிந்துணர்வு உட்பட மலேசியர்கள் என்னும் உன்னத உணர்வும் இந்நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் முகவரி என்றார் பேரா மாநில சுகாதாரம்,மனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அவர்
பீடோர் வட்டாரத்தில் தேசிய கொடியை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதே வேளையில்,பேரா மாநிலம் தேசிய ஒருமைப்பாடுக்கு முன்மாதிரியான மாநிலமாக திகழ்வதாக கூறிய அவர் இம்மாநிலத்தில் பொதுவான நிலையிலும் சரி,அரசியல் நிலையிலும் சரி இதுவரை மதம்,இனம் சார்ந்த எந்தவொரு சிக்கலும் சங்கடங்களும் நிகழ்ந்ததில்லை என்றும் நினைவுறுத்தினார்.
மாநில தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தலைமையேற்றிருக்கும் டத்தோ சிவநேசன் இன,மத நல்லிணக்கத்தைப் பேண பேரா மாநில அரசு தனித்துவமான செயல்பாட்டையும் கொள்கை வரையறைகளையும் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும்,ஒவ்வொரு மலேசியரும் இது நம் நாடு,நாம் இந்நாட்டின் மைந்தர்கள் என்னும் உணர்வோடு நாட்டின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி இந்நாட்டின் மீது விசுவாசமும் பற்றும் கொண்டிருக்கவும் வேண்டும் என்றார்.
அதுமட்டுமின்றி, இளையோர்,குறிப்பாக மாணவர்கள் மத்தியில் தேசப் பற்றையும் மலேசியர் என்னும் உணர்வையும் ஆழமாய் விதைக்க வேண்டும்.அப்போதுதான் இதுநாள் வரை நாம் பேணி காத்த ஒற்றுமை,ஒருமைப்பாடு,புரிந்துணர்வு,மத நல்லிணக்கம்,இனம் பேதமற்ற உன்னதம் என அனைத்தும் தலைமுறைகள் கடந்தும் மேலோங்கி செழித்தோங்கும் என்றும் நினைவுறுத்தினார்.
மலேசியா இனவாதம்,மதவாதம் போக்கிலிருந்து விடுதலையாகிவிட்ட நிலையிலும் இன்னமும் சில சுயநலவாதிகளும் குள்ளநரி கூட்டம் தங்களின் சுயலாபத்திற்கும் அரசியல் ஆதாயத்திற்காகவும் இனம் மற்றும் மதத்தை ஆயுதமாக பயன்படுத்தப்பார்க்கிறார்கள்.ஆனால்,மலேசியர்கள் தெளிவார்ந்த சிந்தனையோடும் அறிவார்ந்த உணர்வோடும் உயிர்பெற்றிருப்பதால் அந்தச் சூழ்ச்சிக்காரர்களின் ஆபத்தான நடவடிக்கைகள் தொடர்ந்து உடைத்தெறிதப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றார்.
மேலும்,1969இல் இந்நாட்டில் மே 13 இனக்கலவரம் ஒரு கருப்பு அத்தியாயமாக அமைந்திருந்தாலும் அந்த இருளிலிருந்து நாம் விடியலை நோக்கி நகர்ந்து இன்று ஒற்றுமையாகவும் மலேசியர்களாகவும் ஒரே சிந்தனையோடும் இலக்கோடும் சிறகை விரித்து பறந்து கொண்டிருக்கிறோம் என்றார்.
ஆனால்,கலவரங்களும் இனவாத அழிவுகளையும் எதிர்கொண்ட எத்தனையோ நாடுகள் இன்னமும் அந்த சிக்கலிலிருந்து வெளியேற இயலாமல் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றன என்பதும் நிதர்சன உண்மை என்று டத்தோ சிவநேசன் நினைவுக்கூர்ந்தார்.
நாட்டின் 69வது சுதந்திரநாளை மலேசியர்கள் பெருமிதமான உணர்வோடும் மலேசியர்கள் என்னும் உணர்வோடும் கொண்டாடி மகிழ வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

