


ஷா ஆலம், ஆக 7- சிலாங்கூர் மாநில அரசு சார்பில் 99 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 3,452 மாணவர்களுக்கு பத்து லட்சத்து 35,600 வெள்ளி இலவச பேருந்து கட்டணமாக வழங்கப்பட்டது என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் அறிவித்தார்.
சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், துணைத் தலைமையாசிரியர்கள், பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மற்றும் பள்ளிகளைப் பிரதிநிதித்து உதவி நிதி வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிதி ஒப்படைக்கப் பட்டதாக அவர் கூறினார்.வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், எதிர் நோக்கி வரும் போக்குவரத்து கட்டணப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு மாணவரும் தத்தம் பள்ளிகளில் தலா 300 ரிங்கிட்டைப் பெறுவர் என்று அவர் தெரிவித்தார்.சிலாங்கூர் மாநில மக்கள் நலத் திட்டங்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை வாயிலாக, வசதி குறைந்த அதே வேளையில் சிரமத்தை எதிர் நோக்கி வரும் மாணவர்கள் நிலவரங்களை நன்கு அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் வழங்கிய மனுக்கள் அடிப்படையில் இந்த உதவி நிதியை கல்விக்கான மாநில மானியத் தொகையாக வழங்க முன் வந்துள்ளது என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு தெரிவித்தார் .
இதனிடையே ரவாங் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் சுமூகமான தீர்வு கண்டால் தாம் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஆர்.ஆர்.ஐ தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டுமானம் தொடர்பில், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் உதவியுடன் சம்பந்தப்பட்ட இலாகா வாயிலாக அதற்கான அடிப்படை அனுமதிக் கடிதத்தைப் பெற்று அதை தமது கவனத்திற்கு கொண்டு வந்தால் நிச்சயம் அதற்கான பணிகளை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்துவேன் என்று பாப்பா ராய்டு உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, மாநில ரீதியில் செயல்படும் தமிழ்ப் பள்ளிகளில் நீண்ட காலம் பணி செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மேடையில் பொன்னாடை மாலை அணிவித்து, பரிசும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்ததாக அவர் கூறினார்.
முன்னதாக, நாட்டுப்பண், தமிழ்ப் பக்திப் பாடல், தமிழ் வாழ்த்துப் பாடல் என கலகலப்பாகத் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொய்வில்லாமல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநில அளவில் பணியில் இருந்து வரும் இந்திய சமூகத் தலைவர்களும், மாநில அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் சகோதரிகளும், பாப்பா ராய்டு வின் அலுவலகச் செயலாளர் திருமதி காந்திமதி, மற்றும் மாதவன் முனியாண்டி ஆகியோர் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்திட பேராதவும் ஒத்துழைப்பும் நல்கியதாக பாப்பா ராய்டு தெரிவித்தார்.

