வட்டார கடல் எரிபொருள் மையமாக உருவெடுத்தால்மலேசியா அதிக தேசிய வருவாயை ஈட்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.கடல்சார் தொழில் வல்லுநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன் கருத்து

கிள்ளான், செப். 8- பெட்ரோலிய வளங்கள், பாமாயில் மற்றும் துறைமுக வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி, வட்டார அளவிலான கடல் எரிபொருள் மையமாக மலேசியாவை உருவாக்கினால், நாட்டின் வருவாயை மேலும் அதிகரிக்க முடியும் என்று கடல்சார் தொழில் வல்லுநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகள்இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடல்சார் எரிபொருள் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான பெரும்பாலான அடிப்படை வசதிகள் மலேசியாவில் ஏற்கனவே உள்ளன. மூலப்பொருட்கள், சேமிப்பு வசதிகள், துறைமுகங்கள் மட்டுமின்றி, உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் மலேசியா அமைந்திருப்பதும் நமக்கு மிகப்பெரிய சாதகமாக உள்ளது.

பெட்ரோலிய சரக்குகளைப் பெறுவது, சேமிப்பது மற்றும் வேறு இடங்களுக்கு மாற்றுவது என்ற அளவில் மட்டும் இந்தத் துறையை அணுகாமல், நாட்டிற்குள் மதிப்புக்கூட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக அரசு இதனைப் பார்க்க வேண்டும்.கூடுதல் வருமானம்

எரிபொருளைக் கலத்தல், சேமித்தல் மற்றும் கப்பல்களுக்கு நேரடியாக விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை மலேசியாவிலேயே மேற்கொள்வதன் மூலம் எண்ணெய் சரக்குகளில் இருந்து கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும்.

சரக்குகளைப் பெற்று மற்றொரு இடத்திற்கு மாற்றுவதுடன் நின்றுவிடாமல், நம்மிடம் ஏற்கனவே உள்ள வளங்களைப் பயன்படுத்தி அதிக மதிப்பை உருவாக்க வேண்டும்.

ஆசியாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விநியோகத் தடைகளைத் தொடர்ந்து எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் வட்டார சந்தைக்கு பெட்ரோலியம் மற்றும் கடல்சார் எரிபொருட்களை விநியோகிப்பதில் மலேசியாவுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

கடல்சார் எரிபொருள்குறைந்த கந்தக உள்ளடக்கம் கொண்ட கடல்சார் எரிபொருளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கும், எரிபொருள் கலத்தல் மற்றும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் மலேசியாவுக்கு ஆற்றல் உள்ளது.

இந்தோனேசியாவில் பெட்ரோலியம் மற்றும் பாமாயில் வளங்கள் உள்ளன. பிலிப்பைன்சில் தேங்காய் எண்ணெய் வளம் உள்ளது. இதுபோன்ற வட்டார வளங்களையும் கடல்சார் எரிபொருள் தொழிலுக்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயலாம்.

பொருளாதார நடவடிக்கைகள்மலேசியாவை வட்டார கடல் எரிபொருள் நிரப்பும் மையமாக மேம்படுத்துவதன் மூலம் சேமிப்பு, வர்த்தகம், போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல்களுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட முழு விநியோகச் சங்கிலியிலும் புதிய பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்க முடியும்.

இதன் மூலம் நாட்டிற்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், மலேசியாவின் கடல்சார் தொழில்துறையையும் மேலும் வலுப்படுத்த முடியும்.இவ்வாறு டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன் தெரிவித்தார்.

இவர் கடல்சார் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் என்பதுடன், மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles