சிறுவயது கனவை சொந்தத் தொழிலாக மாற்றிய விக்னேஸ்வரி

‘பென்சி அகாடமி’ மூலம் பேக்கரி துறையில் புதிய பயணம்

மா.பவளச்செல்வன்

கோலாலம்பூர், செப்.11–சிறுவயது முதல் பேக்கரி மற்றும் கேக் தயாரிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தை விடாமுயற்சியுடன் வளர்த்து, இன்று அதையே சொந்தத் தொழிலாக மாற்றியுள்ளார் விக்னேஸ்வரி நாராஜா.

அவரது முயற்சியின் அடுத்த கட்டமாக, கோலாலம்பூர் OUG Parklane பகுதியில் ‘பென்சி அகாடமி’ என்ற பெயரில் பேக்கரி பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. பேக்கரி துறையில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு, அதனைத் தொழிலாக முன்னெடுப்பதற்கான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இந்த அகாடமி செயல்படுகிறது.

சிறிய கேக் வியாபாரம்தனது தொழில் பயணம் குறித்து விக்னேஸ்வரி நாராஜா கூறியதாவது:–

“சிறுவயது முதலே பேக்கரி துறையில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக்குகளைத் தயாரித்து விற்பனை செய்தேன். பின்னர் என்னிடம் கேக் தயாரிப்பைக் கற்றுக்கொள்ள விரும்பிய சிலருக்குப் பயிற்சி வழங்கினேன்.

அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாகவே தற்போது பென்சி அகாடமியைத் தொடங்கியுள்ளேன். சிறிய கேக் வியாபாரமாக ஆரம்பித்த எனது பயணம், இன்று பயிற்சி அகாடமியாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

திறப்பு விழாபென்சி அகாடமியின் திறப்பு விழா நடைபெற்றது. கோலாலம்பூர்–சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் வி.கே.கே. ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அகாடமியைத் திறந்து வைத்தார்.

அகாடமி தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே 5 பேர் பயிற்சியில் இணைந்துள்ளதாக விக்னேஸ்வரி தெரிவித்தார். இது தனது முயற்சிக்குக் கிடைத்துள்ள ஆரம்பகட்ட வரவேற்பாக அமைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிறப்புச் சலுகைகள்இந்த வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பென்சி அகாடமிக்கு நேரடியாக வருகை தந்து, அங்கு வழங்கப்படும் பயிற்சிகள், பாடத்திட்டங்கள் மற்றும் பேக்கரி தொழில் தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்துகொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அகாடமியின் தொடக்கத்தை முன்னிட்டு, அடுத்த ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யும் புதிய பயிலாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேக் தயாரிப்பைக் கற்றுக்கொண்டு அதனைத் தொழிலாக முன்னெடுக்க விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என விக்னேஸ்வரி நாராஜா கேட்டுக்கொண்டார்.

சிறிய அளவிலான கேக் வியாபாரத்தில் தொடங்கி, பேக்கரி பயிற்சி அகாடமி வரை முன்னேறியுள்ள விக்னேஸ்வரியின் முயற்சி, இத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles