
ஈப்போ,செப் 30-
மலேசியர்களிடையே நிலவி வரும் மனநலம் மற்றும் தர்கொலைக்கு முயலும் விவகாரங்களில் மலேசியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் புள்ளியல் விவகார அடிப்படையில் இந்தியர்களின் எண்ணிக்கையும் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தகவல் தெரிவித்தார்.
குழந்தைகள் சார்ந்த மனநலம் பாதிப்பு சிக்கல் 6 குழந்தைகளில் ஒருவருக்கு பாதிப்பு இருப்பதாகவும் கடந்த 2019இல் 7.9 விழுக்காடாக இருந்த இப்பாதிப்பு கடந்த 2023இல் இருமடங்காக அதிகரித்து 16.5 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகவும் கூறிய டத்தோ சிவநேசன் தன் பிள்ளைகளின் மனநலம் சார்ந்து பெற்றோர்களும் பள்ளியில் ஆசிரியர்களும் கூடுதல் அக்கறையும் கவனத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்றார்.நண்பர்களுடனான சிக்கலில் 46 விழுக்காடு,உணர்வு நிலை சார்ந்த பாதிப்பில் 17 விழுக்காடு,செயல்பாடுகள் 25 விழுக்காடு உட்பட அதீத செயலாக்கத்திறனால் 8 விழுக்காடும் கடந்த 2023இல் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் டத்தோ சிவநேசன் விளக்கப்படுத்தினார்.

அதே வேளையில்,மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயலும் இளம் பருவத்தினர் குறிப்பாக 13 முதல் 17 வயதிலானவர்களின் எண்ணிக்கையும் கடந்த 2012 முதல் 2022வரை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.அதில் தற்கொலைக்கு ஆலோசனைச் செய்வோர் கடந்த 2012இல் 7.9% இருந்த நிலையில் 2022இல் அதில் 13.1% ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் தற்கொலைக்கு திட்டமிடுதல் எண்ணிக்கை 6.4 விழுக்காடு (2012) இருந்த நிலையில் 2022இல் அது 10 விழுக்காடாக உயந்துள்ளது என்றும் நினைவுறுத்திய மாண்புமிகு சிவநேசன் தற்கொலைக்கு முயல்வோரின் எண்ணிக்கை 2012இல் 6.8 விழுக்காடாக இருந்து 2022இல் 9.5 விழுக்காடாக உயந்து நிற்பதாகவும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி,கடந்த 2022 முதல் 2026 ஜூன் மாதம் வரை நாட்டில் தற்கொலை செய்து மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 4,830 என்றும் 2022 – 2024ஆம் ஆண்டுகளைக் காட்டிலும் 2025இல் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும் அந்த எண்ணிக்கை அதிகமானதுதான் என்பதையும் நினைவுறுத்திய அவர் கடந்த 2022இல் 981 மரணம் பதிவான நிலையில் 2023இல் 1087, 2024இல் 1114ஆகவும் 2025இல் 1079அகவும் பதிவான நிலையில் இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரை 569 தற்கொலை மரணங்களும் நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார். மேலும் இந்த ஐந்தாண்டில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகமாய் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் 3953 ஆண்களும் (82%), 877 பெண்கள்,அதாவது 18 விழுக்காட்டினரும் தற்கொலை செய்து இறந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஐந்தாண்டில் வயது அடிப்படையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்து கூறுகையில் இளம் தலைமுறையைச் சார்ந்த 19 முதல் 40 வயதிலானோர் 54.2 விழுக்காடும் (2612 பேர்), 41 வயதுக்கு மேற்பட்டோர் சுமார் 1954 பேரும் (40.6%), 154 பேர் (3.2%) 15 முதல் 18 வயது வரையிலானோர் என்றும் புள்ளியல் விவரம் காட்டுவதாக கூறிய அவர் 14 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் 1.1 விழுக்காடு நிலையில் சுமார் 52 பேரும் தற்கொலைக்கு ஆளாகியிருப்பதாக கூறினார்.
இவர்களில் 18 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களின் தற்கொலை மரணம் காதல்,சக நண்பர்களுடனான சிக்கல்,மன அழுத்தம் என நிலவும் சிக்கல்களால் உருவாவதாகும்.அதுபோல் 19 வயது முதல் 41 வயதுக்கு மேற்பட்டவர்களின் தற்கொலைகள் வேலை,குடும்பச் சிக்கல்,கடன் தொல்லை,நண்பர்கள்,பொருளாதார சிக்கல் என பல்வேறு காரணங்களால் அவர்கள் தற்கொலைக்கு ஆளாகிறார்கள் என்பது ஆய்வுகளின் வெளிபாடாகும்.
அதுபோல் இன ரீதியாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் விழுக்காடும் பெரும் அதிர்ச்சியாகவே அமைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்த ஐந்தாண்டில் சீனர்கள் 1666 பேரும் (34.5விழுக்காடு), இந்தியர்கள் 954 பேரும் (19.8%) தற்கொலைக்கு ஆளாகியுள்ள நிலையில் மலாய்காரர்கள் 575 பேர் (11.9%) உட்பட மற்றவர்கள் வகையில் 298 பேரும் (6.17%) தற்கொலையால் மரணமடைந்துள்ளனர் என்றும் கூறிய டத்தோ சிவநேசன் இத்தகவல் பெரும் கவலை அளிப்பதாகவும் விழிப்புணர்வு மலேசியர்களிடையே அவசியம் ஏற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் விழுக்காடும் மாநில நிலையில் ஆராயும் போது சிலாங்கூரில் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அம்மாநிலத்தில் 1368 சம்பவங்களும் ஜோகூரில் 655 சம்பவங்களும் நிகழ்ந்துள்ள நிலையில் கூட்டரசுபிரதேசம் – கோலாலம்பூரில் இந்த எண்ணிக்கை594ஆக் பதிவான வேளையில் பேரா மாநிலத்தில் 493ஆகவும் அதனைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தில் 481 சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக அரசாங்கம் வெளியிட்ட புள்ளியல் விவரத்தை ஊடகத்திற்கு வழங்கினார் டத்தோ சிவநேசன்.பேரா மாநிலத்தில் 2020ஆம் ஆண்டில் 55 மரணம்,2021இல் 115, 2022இல் 110, 2023இல் 98 மற்றும் 2024இல் 113 மரணங்களும் நிகழ்ந்திருப்பதை சுட்டிக்காண்பித்தார்.
பேரா மாநிலத்தில் அதிகமான தற்கொலை மரணங்கள் கிந்தா மாவட்டத்தில் 221 சம்பவங்களும் லாரூட் & மாத்தாங் மாவட்டத்தில் 67 மரணங்களும் மஞ்சோங் வட்டாரத்தில் 47 மரணங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் மொத்த தற்கொலை மரணங்களில் ஆண்கள் 403 பேரும் (82.1%) பெண்கள் 17,9 விழுக்காடு அதாவது 88 பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி இன ரீதியிலான அடிப்படையில் சீனர்கள் 40 விழுக்காடும்,இந்தியர்கள் 30.3 விழுக்காடும் பதிவாகியுள்ள நிலையில் மலாய்காரர்கள் 17.7 விழுக்காடு என்றும் மற்ற பூமிபுத்ராவினர் 7,9 விழுக்காடும் அந்நிய நாட்டவர்கள் 17.7 விழுக்காடும் தற்கொலை செய்துள்ளதாகவும் புள்ளியல் விவரங்கள் காட்டுகின்றன என்றும் டத்தோ சிவநேசன் கூறினார்.
பேரா மாநிலத்தில் இந்தியர் 13 விழுக்காடு ஜனதொகையைக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் தற்கொலை மரண எண்ணிக்கை கவலக்குரியதாகவே அமைந்துள்ளது.சீனர்களைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும் ஜனதொகை எண்ணிக்கையில் 30.3 விழுக்காடு பெரும் பாதிப்பான எண்ணிக்கையே என்றும் அவர் நினைவுறுத்தினார்.
மனநலப் பாதிப்பு அதுசார்ந்து தற்கொலைக்கான முயற்சிகள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்பதெல்லாம் நாட்டின் சுகாதாரம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதை நினைவுறுத்திய டத்தோ சிவநேசன் இம்மாதிரியான சூழலை எதிர்நோக்குபவர்கள் சுகாதார மையங்கள்,ஆலோசனை நிலையங்களை நாடி அச்சிக்கல்களிலிருந்து விடுப்பட முயற்சிக்க வேண்டும்.
அதுபோலவே, குழந்தைகள்,மாணவர்கள் முதற்கொண்டு தங்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்,அவர்கள் சார்ந்த விடயங்களும் அனைத்து தரப்பினரும் கவனமும் அக்கறையும் கொள்ள வேண்டும்.அன்பும் பரிவும் காட்டி அவர்களை அச்சிக்கல்களிலிருந்து விடுவிக்க அனைத்து தரப்பும் பெரும் பங்காற்ற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் குணாதிசயங்களையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கண்டறிதல் வேண்டும்.மாணவர்களின் போக்கில் வேறுபாடு தென்பட்டால் உடனடியான அம்மாணவர்களுக்கு தேவையான ஆலோசனையும் கண்காணிப்பும் வழங்கிட வேண்டும் எனவும் அவர் ஆலோசனைக் கூறினார்.
மேலும், ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் அவர்களின் நலன்,வாழ்வியல் சூழல் உட்பட எல்லா நிலையிலும் கவனம் செலுத்த வேண்டும்.அன்பும் அணுக்கமான உறவும் குடும்பத்தினர் மத்தியில் மேலோங்க வேண்டும்.எல்லா சிக்கல்களையும் குடும்பத்தோடு கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும்.சிக்கல்களைக் களையக்க தீர்வை நோக்கி அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெளிவுரை வழங்கினார்.
அதே வேளையில்,நண்பர்கள் மற்றும் சமூகமும் நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் கூர்ந்து கவனித்தல் வேண்டும்.நம்மை சுற்றிலும் இருக்கும் மனிதர்களில் யாராவது ஒருவர் விசித்திரமான போக்குடனோ செயலோடோ விளங்கினால் அவர் மீது நம் பார்வை திரும்ப வேண்டும்.நமது ஒரு சின்ன புன்னகைப் பார்வையும் அன்பும் பரிவும் பெரும் நன்மையான விளைவுகளை எற்படுத்தும் என்றும் டத்தோ சிவநேசன் சமூக அக்கறையின் வெளிப்பாடு எவ்வாறு இருத்தல் வேண்டும் என்றும் தற்கொலைகளை தடுக்கும் சூழலையும் எடுத்துரைத்தார்.
தற்கொலைகளைத் தடுக்கும் உலக விழிப்புணர்வு நாளை முன்னிட்டு ஈப்போ மேரு போலிடேக் மாரா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிப்ளியோடு கலந்து கொண்ட பின்னர் டத்தோ சிவநேசன் பத்திரிக்கையாளர்களிடம் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

