
சுங்கைபட்டாணி, அக்-4-
தாய்லாந்தில் நடைபெற்ற அனைத்துலக ஆசிய பசிபிக் யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், கெடா மாநிலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தனித்திறமைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
யோகா மாஸ்டர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் பங்கேற்ற ஸ்ரீ சேமித்திரா குணாளன் மற்றும் ஞானேஸ்வரி அந்தோணிதாஸ் ஆகிய இருவரும் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தாய்லாந்தின் ராயோங் நகரில் உள்ள ஸ்டார் கோன்வென்சன் தங்கு விடுதியில் கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டியில் தாய்லாந்து, மலேசியா, இந்தியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 190 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
வட மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பெர்ஃபெக்ட் லைஃப் யோகா அகாடமி மூலம் இதுவரை பல ஆயிரம் மாணவர்கள் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.
கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் யோகா பயிற்சியை வழங்கி வரும் டாக்டர் ராஜேந்திரன், மாணவர்களின் திறமைகளை போட்டிகளின் மூலம் வெளிக்கொண்டு வந்து சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறார்.
மலேசிய அளவில் மட்டுமின்றி அனைத்துலக அளவிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளை பல்வேறு யோகாசனப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி வருவதாக டாக்டர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இப்போட்டியில் தனித்திறமைப் பிரிவில் தங்கம் வென்ற இரு மாணவிகளும், பாரம்பரியப் பிரிவு போட்டியிலும் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தாய்லாந்தில் நடைபெற்ற அனைத்துலக ஆசிய பசிபிக் யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் 2026 போட்டியின்போது, யோகா மாஸ்டர் டாக்டர் ராஜேந்திரன் மலேசிய உலக யோகாசன விளையாட்டு சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு மாணவிகளின் இந்த வெற்றி, மலேசிய மாணவர்களின் யோகாசனத் திறமையை அனைத்துலக அரங்கில் வெளிப்படுத்தியுள்ளதுடன், அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வரும் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் பெர்ஃபெக்ட் லைஃப் யோகா அகாடமிக்கும் பெருமை சேர்த்துள்ளதது.

