
கிள்ளான், அக்.3- பல ஆண்டுகளாக மழை பெய்யும் போதெல்லாம் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து, ஒழுகும் கூரையுடன் அச்சத்திலேயே வாழ்ந்து வந்த 74 வயதான ரவ்ஜா மார்சிட்டின் வாழ்க்கையில் தற்போது ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
கம்போங் பாரு தெலோக் கோங்கில் வசித்து வரும் அவருக்கு, சிலாங்கூர் மாநில அரசின் Kerajaan Prihatin Selangor வீட்டு உதவித் திட்டத்தின் மூலம் புதிய வீடு கிடைத்துள்ளது.
பல ஆண்டுகளாகப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பழைய வீட்டை விட்டுவிட்டு, இப்போது பாதுகாப்பான மற்றும் வசதியான வீட்டில் அவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
ரவ்ஜா மார்சிட்
அதோடு, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பிள்ளைகளின் தாயான அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும் இருந்து வருகிறார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த நிலையில், உடல்நலப் பிரச்சனைகளையும் தனிமையையும் எதிர்கொண்டு வாழ்க்கையைத் தொடர வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், வறுமை ஒழிப்புப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு மேற்கொண்ட சந்திப்பின்போது, புதிய வீட்டைப் பார்த்த மகிழ்ச்சியில் ரவ்ஜாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
புதிய வீடு அவருக்கு வெறும் கட்டிடம் அல்ல; பல ஆண்டுகளாக மழை பெய்யும் போதெல்லாம் மனதில் எழுந்த பயத்திற்கு கிடைத்த ஒரு நிம்மதியான பதிலாக அது அமைந்துள்ளது.
22 அடி அகலமும் 30 அடி நீளமும் கொண்ட இந்த புதிய வீட்டில் மூன்று படுக்கையறைகள் மற்றும் இரண்டு குளியலறைகள் உள்ளன. குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

