
ஷா ஆலம், அக் 3-
மலேசியா பாதுகாப்பாகவே இருக்க வேண்டும் என்றும் “KLIA, செலாயாங் போல மாறுவதை நான் விரும்பவில்லை என
AKPS தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் சுஹைலி முகமட் ஸைன் அவர்கள் கூறியிருப்பதை பெரிதும் வரவேற்கிறேன் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
சரியான நேரத்தில் சரியான கருத்தை திட்டவட்டமாகக் கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை, இந்தச் செய்தி மிகவும் தெளிவானது. KLIA என்பது நாட்டின் முக்கிய நுழைவாயில். எனவே, மலேசியாவின் பாதுகாப்பே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சுரேந்திரன் சுட்டிக் காட்டினார்.
எந்தவொரு கும்பலும், ‘உலாட்’ எனப்படும் சட்டவிரோத இடைத்தரகர் நடவடிக்கைகளும் அல்லது சட்டத்தை மீறும் செயல்பாடுகளும் நாட்டின் நுழைவாயில்களில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது என்று டத்தோஸ்ரீ சுஹைலி சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இதில் யாரேனும் ஈடுபட்டிருந்தால், முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டத்திற்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
அதேவேளையில், சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொழில்முறை முறையிலும், நேர்மையுடனும், எந்தவித பாரபட்சமுமின்றியும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவர் மலேசியக் குடிமகனாக இருந்தாலும் அல்லது வெளிநாட்டவராக இருந்தாலும், சட்டம் அனைவருக்கும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.
நாட்டின் எல்லைகளும் நுழைவாயில்களும் எப்போதும் பாதுகாப்பாகவும் கட்டுப்பாட்டுடனும் இருப்பதை உறுதி செய்வதற்காக AKPS உருவாக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பொறுப்பாகும் என்று என்றார்.
இந்த விவகாரத்தை வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் முன்வைத்த டத்தோ ஸ்ரீ முகமட் சுஹைலி அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் துணிச்சலுடனும், உறுதியுடனும், நேர்மையுடனும் செயல்படும் மேலும் பல அதிகாரிகள் நமக்கு தேவை.
இறுதியாக, கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மலேசியாவின் நலனே முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.
மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
மலேசியா எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்

