உடலால் மறைந்தாலும் உள்ளங்களில் வாழ்கிறார்!

சித்தியவான், அக். 4-

கல்வி, தமிழ், சமயம் மற்றும் சமூகநலத் துறைகளில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, பல தலைமுறையினருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த அமரர் சங்கபூசன் பெரியசாமி நாராயணசாமியின் சேவைகள், மஞ்சோங் இந்து சங்க வட்டாரப் பேரவை ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் நெகிழ்ச்சியுடன் நினைவுகூரப்பட்டன.

மறைந்த முன்னாள் தலைமையாசிரியரும், மலேசிய இந்து சங்கம் பேராக் மாநில முன்னாள் துணைத் தலைவரும், மஞ்சோங் வட்டாரப் பேரவையின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான சங்கபூசன் பெரியசாமிக்கு, சித்தியவான் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான கலாச்சார மண்டபத்தில் அண்மையில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் மொழி மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த அவர், இலக்கியப் பேச்சுகள், கவிதைகள், இலக்கியப் பட்டறைகள் மற்றும் தமிழ் மொழி வகுப்புகள் வாயிலாக மாணவர்கள் மத்தியில் தமிழ் உணர்வை வளர்த்ததுடன், தமிழால் உயர்ந்த எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியதாக நிகழ்வில் உரையாற்றியவர்கள் குறிப்பிட்டனர்.

கல்வித்துறையில் சிறந்து விளங்கிய அவர், மலேசிய இந்து சங்கத்தின் வாயிலாக சமயம் சார்ந்த பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு, தன்னை நாடி வந்தவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வந்ததாக மலேசிய இந்து சங்கம் மஞ்சோங் வட்டாரப் பேரவையின் தலைவர் தொண்டர்மணி இந்திராணி தர்மன் தெரிவித்தார்.

அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் பழகியதுடன், எந்தச் சூழ்நிலையிலும் கோபப்படாமல் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்பட்ட சிறந்த மனிதராகவும் அவர் திகழ்ந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் சங்கபூசன் பெரியசாமி முக்கியப் பங்காற்றியதாக மலேசிய இந்து சங்கத்தின் பேராக் மாநில முன்னாள் தலைவர் சங்கரத்னா அ.மு.சு.ஏகாம்பரம் கூறினார்.

குறிப்பாக சங்கத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதிலும், மலேசிய இந்து சங்கத்தின் பேராக் மாநில பேரவைக்கு சொந்தக் கட்டிடம் வாங்குவதற்கும், பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அவர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து மாற்றங்களை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி, சமயம், சமூக நலன் என பல்வேறு தளங்களில் அவர் ஆற்றிய பணிகள், மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிப் பயணத்தில் அவரது பங்களிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தன்னை நாடி வந்தவர்களுக்கு அன்புடன் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி, வாழ்க்கையில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டிய அவரது பண்புகளையும் சேவைகளையும் பலரும் நினைவுகூர்ந்தனர்.

அன்பும் பண்பும் நிறைந்தவராக எளிமையுடனும் பொறுமையுடனும் வாழ்ந்த அவரது மறைவு, அவரை அறிந்த அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளதாகவும் உரையாற்றியவர்கள் தெரிவித்தனர்.

அவரது தமிழ்ப்பணி, சமூக மற்றும் சமயச் சேவைகளை நினைவுகூர்ந்தபோது, நிகழ்வில் கலந்துகொண்ட பலரின் கண்களில் கண்ணீர் ததும்பியது. உடலால் மறைந்தாலும் அவர் விதைத்த தமிழ் உணர்வும், உருவாக்கிய மாணவர்களும், ஆற்றிய பணிகளும் அவரை தொடர்ந்து நினைவுகூரச் செய்யும் என பலரும் தெரிவித்தனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் சங்கபூசன் பெரியசாமியின் குடும்ப உறவுகள், அவருடன் பணியாற்றிய தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மலேசிய இந்து சங்கப் பொறுப்பாளர்கள், நண்பர்கள், மாணவர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles